Archive for the ‘நில் கவனி சாப்பிடாதே’ Category

நிற்க கூட நேரமில்லை என்று சொல்லும் அளவுக்கு நாம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறோம் அல்லது நம்மைச் சுற்றி எல்லோரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் சென்னை போன்ற மாநகரங்களில் இயந்திரம் போலத்தான் வாழ்க்கை. அந்த இயந்திர வாழ்க்கையின் ஒரு அங்கம்தான் உணவு! வீட்டுச் சாப்பாடு பற்றி அல்ல இந்தப் பேச்சு, வெளியில் தள்ளுவண்டிக் கடை முதல் 5ஸ்டார் ஓட்டல் வரையில் பரிமாறப் படும் உணவும் ,அதன் விலையும் தரமும் எப்படி இருக்கிறது? தரமான உணவு என்பது அதன் விலையைப் பொருத்ததா? இல்லை பிரபல ஹோட்டல் என பெயர் எடுத்துவிட்டாலே அங்கே தரமான உணவு கிடைத்துவிடுமா ? அது சரி , சாப்பாடு வெந்ததா வேகலையா ? நல்ல இருக்கா? தரமானதா ?என்றெல்லாம் பார்த்தா சாப்டுகிறோம் .இதை எல்லாம் யோசிக்க?!

இன்று ஒரு மத்திய தர ஹோட்டலுக்கு சாப்பிட சென்றேன். மகளிர் சுய உதவிக் குழுவால் நிர்வகிக்கப் படுகிற ஒரு ஹோட்டல். முழுக்க முழுக்க மிடில் கிளாஸ் மக்களை குறிவைத்து இயங்குகிறது. மதிய சாப்பாடு 60 ரூபாய் ஆனால் அன்லிமிடெட் சாப்பாடு.


தரமா ? என்றால் இல்லை;சரி சுவையா? என்றால்,இல்லை;  சரி எப்படித்தான் இருந்தது சாப்பாடு ? என்றால் , காரமாக , அஜினோமோட்டோ அதிகம் கலந்த, சுமாராக வெந்த சாப்பாடாக இருந்தது. அதிலும் பிரியாணி என்று தக்காளிச் சாப்பாடு வைத்தார்கள் பாருங்களேன் அங்குதான் நான் பிரியாணியையே மறந்து போனேன்!

60 ரூபாய் என்பது குறைவானதா ? அதற்க்கு தரமான சுவையான உணவைக் கொடுக்க முடியாதா? பல ஹோட்டல்கள் அருகருகே இருந்தும் தரமான உணவு ஏன் தொலைவில் தேடும் இடத்தில் உள்ளது?  அங்கே சாப்பிட்ட சாப்பாடு செரித்துவிடும் போல , ஆனால் இந்தக் கேள்விகள் இன்னும்  செரிக்காமலே இருக்கிறது!

படங்கள்: கூகிள்

 

 

அறுசுவை முக்கியம் அமைச்சரே

சாப்பாடு என்பது எவ்வளவு முக்கியம் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை உங்களுக்கு. தமிழர்கள் சாப்பாட்டை அறுசுவை சேர்த்து சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள்!

பக்கத்துக்குப் பக்கம்

ஆனால் இன்று பக்கத்துக்கு பக்கம் பத்து உணவகங்கள் இருந்தாலும் அதில் சுவையான , தரமான உணவு என்பது என்னவோ கேள்விக் குறிதான்! விலை அதிகமாக இருந்தால் சுவை இருப்பதில்லை , சுவை இருந்தால் விலை அதிகம் , விலையும் குறைவு சுவையும் குறைவு,விலை குறைவென்றால் தரம் இல்லை , சுவை அதிகம் இருந்து சுத்தம் இல்லை இப்படிப் பல குறைபாடுகள் ஆனால் அவர்கள் வாங்கும் பில்லில் எந்தக் குறையும் இல்லை!!

இந்தத் தொடரில் நான் சாப்பிட்டு அல்லது நான் கேட்டுத் தெரிந்த உணவகங்கள் பற்றி சொல்லப் போகிறேன்!
மீன்குழம்பு! வாழை இலை விளம்பரம்!
வாழை இலை , மீன் குழம்பு சாப்பாடு ! இப்படி ஒரு விளம்பரம். பார்த்தவுடன் அதுவும் பயண அவசரத்தில் இருப்பவர் போகாமலா இருப்பார் ? இன்று ஒரு பிடி பிடித்து விட வேண்டியதுதான், இல்லை அளவோடு சாப்பிடுவோம் , மீன் குழம்பு சாப்பாடு போதுமா கூடவே ஏதாவது சிக்கன் , மட்டன் என்று வாங்கிக் கொள்ளலாமா என்றெல்லாம் ஆயிரம் வண்ண வண்ண உணவு எண்ணங்கள்!
ஏமாற்று வேலை
போகும் போதே மீன் குழம்பு இருக்கிறதா என்று கேட்டுதான் உட்கார்ந்தேன்! வாழை இலை போட்டார்கள்! அதில் தண்ணீர் தெளித்து அதைத் துடைத்துக் காத்துக் கொண்டிருந்தேன், சாப்பாடும் வந்தது. சாப்பாடு ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை , சரி நமக்குத்தான் மீன் குழம்பு இருக்கிறதே என்று நினைத்தேன்.அப்பளத்தைச்  சாப்பிட்டு விட்டு மீன் குழம்பு கேட்டேன் , அப்பொழுது ஒருத்தன் சார் மீன் குழம்பு தீர்ந்து விட்டது என்றான்!

சட்டென்று கோபம் வந்துவிட்டது , மீன் குழம்பு இருக்கானு கேட்டுட்டுத் தானே வந்தேன் அப்ப இருக்குனு சொல்லிட்டு இல்லன்னு சொன்னா எப்படி , சாப்பாடு விற்கணும் என்று இப்படி சொல்லுவீங்களா என்று கத்திய பிறகு . தீர்ந்துடுச்சு சார் , உங்களுக்கு முட்டைக் குருமா மற்றும் சிக்கன் குழம்பு தருகிறோம் என்று கொடுத்தார்கள். கோபம் வருபவரை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்து இருக்கிறார்கள்!

பொறுங்கள் இவனுக்குத்தான் மீன் குழம்புக்குப் பதில் சிக்கன் மற்றும் முட்டைக் குழம்பு கிடைத்ததே! பாவம் ஹோட்டல் கடைக்காரன் அவனுக்குத்தான் நஷ்டம் என்று நீங்கள் சொல்வது என் காதில் கேட்கிறது. ஆனால் நடந்தது வேறு!

குடிமகன்களின் விருப்ப உணவு

அந்த ஹோட்டல் தாம்பரம் பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கம் இருந்ததாலும் , நம் குடிமகன்களின் வருகை அந்தக் கடைக்கு அதிகம் உண்டு என்பதாலும் , முட்டை மற்றும் சிக்கன் குழம்புகளில் சிக்கன் , முட்டை இருந்ததோ இல்லையோ மசாலாவும் , காரமும் அதிகமாகவே இருந்தது! அதிலும் சிக்கன் குழம்பில் மட்டும் அஜினமோட்டோ ரொம்ப அதிகம்( மேகி நூடுல்ஸ் மட்டும் அல்ல நம்ம ஊருக்காரன் குழம்பையும் தடை பண்ணனும் போல!!). வழக்கமா சைடிஸ்னு சொல்லி சிக்கன் ஆர்டர் பண்ணுவோம் , ஆனா இந்தக் குழம்புக்கு சைடிஷ்னு கோட்டர் ஆர்டர் பண்ணனும் போல அவ்வளவு காரம்!!நன்றாகவும் இல்லை.

ஆனால் சாம்பார், ரசம் சூப்பர்! சாம்பாருக்கு விளம்பரம் பண்ணி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்!! ஒருவழியாக சாப்பிட்டு முடிச்சு பில் காசு கொடுக்கும் பொழுது ” மீன் குழம்பு இருக்கா என்று கேட்டுத் தானே உள்ளே வந்தேன், வந்ததும் இல்லன்னு சொல்றீங்க ? தெளிவா கூட சொல்ல மாட்டீங்களா ? விற்க்கனுமே என்று இப்படித்தான் செய்வீர்களா ?? திரும்ப வந்து சாப்டனும் , நாலு பேருட்ட நல்லா இருந்தது என்று சொல்லணும் அப்டிங்கற மாறி நடந்துக்கலாமே” ( இந்தப் பொழைப்பிற்கு போய் …………இது மைண்ட் வாய்ஸ்!!!)  என்று சொல்லித்தான்  கொடுத்தேன்!! அப்பொழுது அவர் தலையக் குனிந்து கொண்டார்! என் மேல் தப்பில்லை என்று தெரிந்து கொண்டு நிம்மதி ஆனேன் . இனி இதுதான் இங்கு வருவது கடைசி முறை என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினேன்!!

இதுதான் அந்த ஹோட்டல்

அந்தக் கடையின் பெயர் M .K .N இட்லிக் கடை. வேளச்சேரி மற்றும் தாம்பரம் பூண்டி பஜாரில் உள்ளது!! இது சாப்பாடு இல்லை கு(ட்)ப்பை!!

படங்கள் & நன்றி: கூகிள்

வரவேற்கிறோம்

குறிப்பு: நீங்களும் உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்பினால் thooral9@gmail.com என்ற மெயிலுக்கு அனுப்பவும்! அல்லது இங்கு கமெண்ட் கொடுக்கவும்!! தகவல்கள் உங்கள் பெயரோடு இங்கே பதிவிடப் படும்! இது நல்ல ஹோட்டல் பற்றிய தகவல்களுக்கு உதவியாக இருக்கும்!