Posts Tagged ‘Social’

கொலையை விட வேறு ஜாதி காதல் அவமானமா?!

மகளின் வேறு ஜாதி காதல் திருமணத்தால்   உறவினர்கள் என்னை கேவலமாக பேசினார்கள். என்னால் கோவில் விழா உள்பட வெளியே எங்கேயும் செல்ல முடியவில்லை. இது எனக்கு அவமானமாக இருந்தது- கௌசல்யாவின் தந்தை வாக்குமூலம்

செய்தி:ஒரு தந்தையின் வாக்குமூலம்

Thanks Dinamani

 

 

அவர்கள் நம்மிடையே தான் இருக்கிறார்கள்!

 நம் பக்கங்களில் வந்து
கருத்து சொல்வார்கள்,
நம்மை திட்டும் பக்கங்களிலும்
சென்று லைக் இடுவார்கள்.

மதத்தை மறுத்தால்
Baguthஅறிவாதி என்பார்கள்,
சாதியை வெறுத்தால்
முற்போக்கு வியாதி  என்பார்கள்.
அவர்கள் நம்மிடையே தான் இருக்கிறார்கள்!

பெரியார் அம்பேத்கர்
பிரிவினைவாத பெயர்கள் என்பார்கள்,
இந்துத்துவம் என்றால்
ஜெய் ஹிந்த்  என்பார்கள்.

பெருமாள் முருகனை
ஆபாசம் என்றார்கள்,
கல்புர்கி கொலையை
கள்ளமாக ரசித்தார்கள்.
அவர்கள் நம்மிடையே தான் இருக்கிறார்கள்!

இஸ்லாமியன் என்றால்
துலுக்கன் என்பார்கள்.
கிருத்துவன் என்றால்
மிசனரி என்பார்கள்.

பார்பனீயம் என்று சொன்னால்
வெறுப்பரசியல் என்பார்கள்;
தலித் என்று சொன்னால்
ஓட்டரசியல் என்பார்கள்.
அவர்கள் நம்மிடையே தான் இருக்கிறார்கள்!

படித்து முன்னேறினாலும்
கோட்டால படிச்சவன் என்பார்கள்,
மேற்கொண்டு படிக்கலாம் என்றால்
இடஒதுக்கீடு கூடாது என்பார்கள்.

சாதியை ஒழிக்கணும் என்றால்
சாதி சான்றிதழை கிழி என்பார்கள்,
கலப்பு திருமணம் என்றால்
கௌரவ கொலை என்பார்கள்.

அவர்கள் நம்மிடையே தான் இருக்கிறார்கள்!

நாம் போராடும் போதும்,
அவமானப்படும் போதும்,
அடிவாங்கும் போதும்,
கொல்லப்படும் போதும்
அமைதியாக இருப்பார்கள்.

செத்த பின் ஐயோ பாவம் என்பார்கள்,
சாதிசாயம் பூசாதீர்கள் என்பார்கள்.
தலித் பிணமா என்று பார்த்துவிட்டு
சுடுகாட்டு கேட்டை திறப்பார்கள்.
அவர்கள் நம்மிடையே தான் இருக்கிறார்கள்!

மீள்பதிவு: http://rajarajanrj.blogspot.sg/2016/01/blog-post_20.html
நன்றி: இராஜராஜன்

கடும் சாதிய நிழல் படிந்த தமிழக கல்வி நிறுவனங்கள்!

நன்றி: தி ஹிந்து தமிழ்
செய்தி:தி ஹிந்து தமிழ்

‘தமிழகத்தில் தலித் ஒடுக்குமுறை பள்ளிக்கூடங்களிலேயே ஆரம்பித்துவிடுகிறது’

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை இந்திய கல்வி நிறுவனங்கள் பலவற்றிலும் சாதியத்துக்கு எதிரான போராட்டங்களை வலுக்கச் செய்திருக்கிறது.

இந்தச் சூழலில், சாதி பாகுபாடு உயர் கல்வி நிறுவனங்களில் எந்த அளவுக்கு வேரூன்றியிருக்கிறது. அரசாங்கத்தின் அதிரடி பட்ஜெட் குறைப்புகளும், அவசரகதி முடிவுகளும் ஒரு தலைமுறையையே எவ்வாறு துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்பதை ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் பகுப்பாய்வு செய்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸில், நெல்லையில் பள்ளி மாணவர்கள் தாங்கள் என்ன சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை அடையாளப்படுத்தும் விதமாக வெவ்வேறு நிறத்திலான கைப்பட்டைகளை அணியும் பழக்கம் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இந்த நோட்டீஸ் நடவடிக்கை காலம் தாழ்த்தி எடுக்கப்பட்ட ஒன்று என்றுதான் கூற வேண்டும். ஏனெனில், சாதி பகட்டு மிகுந்த தென் மாவட்டங்களில் இது போன்ற சாதியை பறைசாற்றும் சாய பட்டைகள் அணிவது காலங்காலமாகவே இருந்து வருகிறது.

தமிழக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சாதி ரீதியிலான பிரிவினைவாதம் எப்படி இழையாடியுள்ளது என்பதை உணர்த்துவதற்கு இதைவிட தெளிவான சான்று இருக்க வாய்ப்பில்லை.

ஆண்டாண்டு காலமாக நீளும் தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறைக்கு 2012-ல் இளவரசன் படுகொலை மற்றுமொரு சாட்சியம். தலித் சமூகத்தைச் சேர்ந்த இளவரசனுக்கும், வன்னியர் சமூகத்தைச் (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு) சேர்ந்த திவ்யாவுக்கும் இடையேயான காதல் சாதி மோதலாக மாற்றப்பட்டது. தருமபுரி சாதித் தீயால் பற்றி எரிந்தது.

தமிழகத்தில், இன்னமும் கலப்புத் திருமணங்களுக்கு எதிரான சகிப்பின்மை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இளவரசன் – திவ்யா காதல் விவகாரத்துக்கு பின்னர், வட தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தும் வன்னியர் சமூகத்தின் பிரதிநிதியாக திகழும் பாட்டாளி மக்கள் கட்சி, கலப்புத் திருமணங்களுக்கு எதிராக பல்வேறு அரசியல் அமைப்புகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டது.

கலப்பு திருமணங்களை ‘நாடகத் திருமணங்கள்’ என்று விழித்த பாமக, இதிலிருந்து தங்கள் சமூக பெண்களை பாதுகாக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தது.

பாமகவின் இந்த அறைகூவல் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவச் சமூகத்தினர் மத்தியில் வேகமாக பரவியது. அவர்களும், கலப்புத் திருமணங்களுக்கு எதிராக தங்கள் பிரச்சாரத்தை தொடங்கினர். ‘கலப்புத் திருமணங்களுக்கு எதிரான பிரச்சார குழு’ என்ற பெயரில் ஒரு இயக்கமும் உருவானது. நாமக்கல் மாவட்ட கல்லூரிகளிலும் இது காட்டுத் தீ போல் பரவியது. அவர்கள் விநியோகித்த துண்டு பிரசுரங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை எள்ளி நகையாடும் வாசகங்களின் நெடி இருந்தது.

இத்தைகைய சாதிக் கொடுமைகளுக்கு இன்னும் பல சான்றுகள் இருக்கின்றன.

மதுரை-விருதுநகர் எல்லையில் உள்ள குறையூர் எனும் கிராமத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில் கடந்த 40 ஆண்டுகளாகவே தலித் மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது மேலுமொரு சான்று.

குறையூரில் அரசுப் பள்ளியிலேயே சாதி அடக்குமுறை இருப்பதால் அப்பகுதி தலித் மக்கள் தங்கள் பிள்ளைகளை மிஷனரி பள்ளியில்தான் படிக்க வைக்கின்றனர் என்ற உண்மை தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்றிருக்கிறார் சாதி அடக்குமுறைக்கு எதிராக போராடும் எவிடன்ஸ் தொண்டு நிறுவனத் தலைவர் கதிர்.

கல்வி நிறுவனங்களில் சாதிய ஆதிக்கம் குறித்து தலித் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் கூறும்போது, “மாணவர்கள் முன்பைவிட இப்போதுதான் சாதிய அடையாளங்களை அணிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

தங்கள் சாதி தலைவர்கள் புகைப்படம் அடங்கிய லாக்கெட், பிரேஸ்லெட்டுகள் அணிந்து கொள்வதில் பெருமிதம் கொள்கின்றனர்.

கல்வி நிலையங்களில் தீண்டாமை அப்பட்டமாக புழக்கத்தில் இல்லை. ஆனால், சில சலுகைகளை பெறுவதில் குறிப்பிட்ட சமுதாய மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் முன்னுரிமை, சக மாணவர்கள் மத்தியில் கிடைக்கும் மரியாதை போன்ற விஷயங்களில் சாதி பாகுபாடு வெளிப்படுகிறது” என்றார்.

தலித் இலக்கியம்:

கல்வி நிறுவங்களில் நிலவும் சாதிய பாகுபாடுக்கு இன்னுமொரு சான்று தலித் இலக்கியங்களின் புறக்கணிப்பு. தென் மாவட்ட கல்லூரிகள் சில மிகக் கவனமாக, லாவகமாக தலித் இலக்கியங்களை பாடத்திட்டத்திலிருந்து நீக்கியுள்ளன. இதற்குக் காரணம் இதர பிற்படுத்தப்பட வகுப்பினரின் ஆதிக்கமே எனக் கூறுகிறார் தலித் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.

தமிழக கல்வி நிறுவனங்களில் எப்போது புகைந்து கொண்டிருக்கும் சாதி சில சமயங்களில் நெருப்பாக கொளுந்துவிட்டு எரிவதும் உண்டு.

அப்படித்தான், கடந்த 2008 நவம்பர் 12-ல், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி வளாகம் போர்க்களமானது. கல்லூரி விழா தொடர்பான போஸ்டரில் ஓபிசி வகுப்பு மாணவர்கள் அம்பேத்கர் என்ற பெயரை புறக்கணித்ததே பிரச்சினைக்கு காரணமானது. இதனையடுத்து தலித் சமூக மாணவர்களுக்கும், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. பயங்கர ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை சமர்ப்பித்த நீதிபதி சன்முகம் கமிஷன், சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் பின்னணில் சாதி அமைப்புகள் இருந்ததாக குறிப்பிட்டது என்பது இவ்விடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது.

சாதி ஆதிக்கம் குறித்து, எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான மார்க்ஸ் கூறும்போது, “தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் பேரசிரியர்களும் சாதி அடிப்படையில் குழுக்களாக பிரிந்து கிடக்கின்றனர்” என்றார். பல்கலைக்கழகங்களில் எஸ்.சி இடஒதுக்கீடு கீழ் இருக்கும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதேயில்லை என்று மேலும் ஒரு குற்றச்சாட்டை மார்க்ஸ் முன்வைத்தார்.

இது குறித்து சற்று விரிவாக விவரித்த அவர், தலித்துகளுக்கும் கல்வி நிறுவனங்களில் பணி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை அமல்படுத்துவதில் இருந்து தப்பிக்க ஆதிக்க சாதியினர் கடைபிடிக்கும் பல்வேறு வழிவகைகளும் கூறினார். அவ்வாறாக பரவலாக கூறப்படும் சாக்கு, ‘திறமையானவர் கிடைக்கவில்லை அதனால் தலித்துக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை’. இவ்வாறு மார்க்ஸ் கூறினார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் பிரமர் மோடிக்கு எதிராக அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர் அமைப்பு செயல்படுவதாக அனுப்பப்பட்ட ஒரு மொட்டைக் கடிதம் தலித் மாணவர்கள் எத்தகைய பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது என்பதை மறக்க முடியாது எனக் கூறும் மார்க்ஸ், “மாநில அரசுக்கு சட்டம் ஒழுங்கை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும் மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. 49 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் தமிழகத்தை மாறி மாறி ஆண்டிருந்தாலும், சாதி ஒழிப்புக்காக அவர்கள் எடுத்த நடவடிக்கை என்னவோ மிகச் சொற்பமானதேஎன்றார்.

 

நேசிக்க மறந்தோமா நாம்?

சாதி, மொழி, நிறம், பிராந்தியம், தேசம் மற்றும் வர்க்க அடையாளங்கள் மற்றும் பிரிவினைகளைத் தாண்டி ஒரு மனிதன் சகமனிதனை நேசிப்பதற்கும் விடுவிப்பதற்கும் கல்வி உதவ வேண்டும். அத்தகைய சுதந்திரச் சிந்தனையை வளர்க்கும் கல்வியைத்தான் இந்தியப் பள்ளிகளும் உயர்கல்விக் கூடங்களும் வழங்க வேண்டும் என்று சுதந்திர இந்தியாவை நிர்மாணித்த தலைவர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் பல்கலைக்கழக விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட தலித் ஆய்வு மாணவர் ரோகித் வேமூலாவின் தற்கொலை அவர்கள் வைத்திருந்த நம்பிக்கைகளைச் சிதைப்பதாகத்தான் உள்ளது. சாதிய ஒடுக்குமுறையும், தீண்டாமையும் பாகுபாடுகளும் வன்முறைகளும் நம் கண்ணுக்கே தெரியவராத இந்தியக் கிராமங்களில்தான் நிகழ்கிறது என்று பெரும்பாலானோர் இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் சாதி நமது வீடுகள், பள்ளிகள், விடுதிகள், கல்லூரிகள், உணவுப் பழக்கவழக்கங்கள், நாம் புழங்கும் பொதுவெளிகள் என எங்கும் நிறைந்திருக்கின்றன. காதல், திருமணம் தொடங்கி வேலை, நட்புகள் வரை சாதி நவீன ரூபங்களில் நம்மைத் தொடரவே செய்கின்றன.

சமீப வருடங்களில் இந்தியாவெங்கும் பள்ளிகள் மற்றும் உயர்கல்விக் கூடங்களிலும் சாதிய அடையாளங்கள் அடிப்படையில் மாணவர்களிடையே மோதல்களும் பிரிவினைகளும் அதிகரித்துள்ளன. பாடப் புத்தகங்களிலும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டத் தலைவர்களின் தேசப் பங்களிப்புகள் தணிக்கை செய்யப்பட்டிருக்கின்றன.

தமிழகப் பள்ளிகளில் ஒவ்வொரு சாதி மாணவரும் தனித்தனி நிறங்களில் கைகளில் கயிறு கட்டி அணியணியாகத் திரளும் செய்திகளையும் சமீபத்தில் கேள்விப்பட்டுவருகிறோம். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்கள் உடல்வேலையில் ஈடுபடுத்தப்படுவதும் தரையில் உட்கார வைக்கப்பட்டுத் தனியாக மதிய உணவு வழங்கப்படும் முறைகளும் நடைமுறையில் உள்ளன. தலித் மாணவர்கள் பள்ளியை விட்டு விலகும் சதவீதமும் சமீபகாலத்தில் அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிக்கல்வியை இத்தகைய பாகுபாடுகள் மற்றும் நெருக்கடிகளை மீறி போராடி முடிக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்விக் கூடங்களில் இன்னொரு பெரிய சவால் காத்திருக்கிறது. அவர்களின் மேம்பாட்டுக்கு அரசியல் சாசனம் உறுதியளித்திருக்கும் இடஒதுக்கீடு முறையே அவர்களை ஒதுக்கவும் ஒரு வகையில் காரணமாகிவிடுவதை என்னவென்று சொல்ல! இட ஒதுக்கீட்டில் ஐ.ஐ.டி மற்றும் பல்கலைக்கழகங்களில் மேற்படிப்புக்கு வரும் தலித் மாணவர்கள் இட ஒதுக்கீட்டைக் காரணம் காட்டியே அவமதிப்பைச் சந்திக்கின்றனர். கல்வி ரீதியாக, நிர்வாக ரீதியாக தொடர் புறக்கணிப்புகளுக்குள்ளாகி அவர்கள் தேர்வுகளில் தோற்கும் நிலை ஏற்படுகிறது. வளாகத்துக்குள்ளேயே தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடக்கின்றன.

கல்விக்காக துரோணருக்கு விரலைக் கொடுத்த இதிகாச காலம் தொடங்கி, இன்று வரை அறிவும் வாய்ப்புகளும் சில வகுப்பினருக்கே என்னும் மனப்போக்கு இந்தியாவில் இன்னும் தொடர்வதற்கான அடையாளம்தான் ரோகித் வேமூலாவின் தற்கொலை.

கல்லூரிகளில் சாதி, சாதிய ஒடுக்குமுறை பற்றி உரையாடல் எழும்போதெல்லாம் இட ஒதுக்கீடு சார்ந்த விவாதமாக மாற்றப்படுகிறது. இட ஒதுக்கீட்டில் வரும் மாணவர்கள் குறைவான அறிவுடையவர்களாகப் பார்க்கப்படுகின்றனர். அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கான எந்தக் கோரிக்கையும் மதிப்பில்லாதவர்கள் கோரும் அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இட ஒதுக்கீடு அறுபது ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பினும், உயர்கல்விக் கூடங்களிலும், நிர்வாக வட்டங்களிலும், ஆசிரியப் பணிகளிலும் உயர் சாதியினரே நிறைந்துள்ளனர். அந்த இடத்திலிருந்துதான் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறையும் பாகுபாடுகளும் தொடங்குகின்றன.

ரோகித் வேமூலா, யாகூப் மேமனின் மரண தண்டனை நிகழ்வைக் கண்டித்து மரண தண்டனைக்கு எதிராகப் போராடியவர். அம்பேத்கர் பெயரில் இயங்கிய மாணவர் அமைப்பில் செயலாற்றியவர். யாகூப் மேமன் மரண தண்டனையை எதிர்த்ததால், வளாகத்தில் இயங்கிய ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினரின் எதிர்ப்பையும் புகார்களையும் சந்தித்தவர். மத்திய அமைச்சர் பண்டார தத்தாத்ரேயின் வலியுறுத்தலால் தேசத்துரோகம், சாதியவாதம் ஆகிய குற்றங்களின் அடிப்படையில் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்.

ஒரு பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்களுக்கிடையே நடந்த கருத்துவேறுபாடு, இத்தகைய பழிவாங்கலுக்கு எப்படி காரணியானது? ரோகித், விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் விடுதி வளாகத்துக்கு வெளியே சில நாட்களின் இரவுகளில் தங்கி தன்னை மீண்டும் சேர்க்குமாறு போராடிய பிறகே தற்கொலை செய்துகொண்டார். உதவித்தொகையும் மறுக்கப்பட்டதால் அவரிடம் பணம் இருந்திருக்கவும் வாய்ப்பில்லை.

பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி வளாகங்களில் செயல்படும் ஏ.பி.வி.பி. போன்ற அமைப்புகளால் எப்படி ஒரு தலித் மாணவருக்கு எதிராக நிர்வாகத்தைப் பணியவைக்க முடிகிறது? ஒரு மத்திய அமைச்சர் எப்படி ஒரு மாணவரின் வெளியேற்றத்துக்குத் துணைபோக முடிகிறது?

கல்வி என்பது பிறரை, பிற வாழ்க்கை நிலைகளை நேசிக்கும் சாதனம் என்பதை மறந்துவரும் தலைமுறையா நாம்? அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் எவ்வளவோ தொலைவையும் இடைவெளியையும் கடந்து தொடர்புகொள்ளும் ஊடகங்கள் பெருகிய காலத்தில் வாழ்ந்துவருகிறோம். ஆனால் அத்தனை ஊடகங்களிலும் பழைய வெறுப்புகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுவருகின்றன. நேசிக்காமல் இருப்பதென்பது ஒரு துரதிர்ஷ்டம். இன்று நாம் எல்லாரும் இந்தத் துரதிர்ஷ்டத்துக்கு இரையாகிக்கொண்டிருக்கிறோம் என்று சென்ற நூற்றாண்டில் ஆல்பெர் காம்யு சொன்னது இப்போது மிகவும் உண்மையாக மாறியுள்ளது.

நன்றி: தி ஹிந்து தமிழ்
செய்தி:தி ஹிந்து தமிழ்

ரோஹித்துகள் ஏன் இறக்கிறார்கள்?

பள்ளிப் பருவத்தில் தலித் நண்பன் ஒருவன் எனக்கு இருந்தான். ஒருமுறை, சற்றே வேடிக்கையாக அவனிடம் நான் இப்படிக் கேட்டேன்:

“நம்ம ரெண்டு பேரு குடும்பமும் ஓரளவு வசதிதான். ஆனா, என்னை மாதிரி இல்லாம நீ மட்டும் இடஒதுக்கீட்டின் பலன்களை அனுபவிக்கிறியே. என் இடத்துக்கு நீயும் உன் இடத்துக்கு நானும் மாறிக்கொண்டால் என்ன?” அதற்கு அந்த நண்பன் சீரியஸாகவே பதில் சொன்னான்: “தோழா, ஒரு தலித்தாக இருப்பதுன்னா என்னன்னே உனக்குத் தெரியாது. ஒனக்கு மட்டுமல்ல யாருக்கும் அந்த நிலை ஏற்படக் கூடாது.”

அதற்கும் பல ஆண்டுகள் கழித்தே அந்த நண்பன் சொன்னதில் இருந்த வலியையும் பரிதவிப்பையும் நான் புரிந்துகொண்டேன். மற்றுமொரு தலித் நண்பன் (அவனுடைய பேர் ராமு என்று சும்மா வைத்துக்கொள்வோம்) தனது தோழி ஒருத்தியுடன் (அவள் பேர் ராணி என்று வைத்துக்கொள்வோம்) பேசிய விஷயத்தைப் பற்றி என்னிடம் குறிப்பிட்டபோதுதான் எனக்கு எல்லாமே உறைத்தது.

ராமு நல்ல பையன். என்ன… கொஞ்சம் தாழ்வுமனப்பான்மை கொண்டவன். தனது சாதிப் பின்னணியை எப்போதுமே மறைக்க முயல்வான். ஆகவே, ராமு ஒரு தலித் என்பது ராணிக்குத் தெரியவில்லை. அவர்களுக்குப் பொதுவான நண்பன் ஷ்யாமுவைப் பற்றி அவர்கள் பேசியது இது:

ராணி:

“ஏய், ஒனக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஷ்யாமு ஒரு தலித் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப்போறான்.”

ராமு:

“அப்படியா… அவனுக்கு என்னோட வாழ்த்துக்கள்!”

ராணி:

“ஆனா, அவள் ஒரு தலித் பொண்ணுப்பா.”

ராமு (தனது மனம் புண்பட்டதை மறைக்கும் விதத்தில்):

“இந்தக் காலத்தில் இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. உலகம் முன்னே போய்க்கிட்டிருக்கு.”

ராணி:

“இருக்கலாம்பா, ஆனாலும்… ஒரு தலித் பொண்ணைப்போய்…?”

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ராணி முற்பட்ட வகுப்பை அல்ல; மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண். சாதிப் பாகுபாட்டால் பாதிப்புக்குள்ளாகுபவர்கள்கூட இந்தச் சாதி நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது நமது ஒட்டுமொத்த சமுதாயத்தின் மனநிலையில் சாதி அமைப்பு எந்த அளவுக்கு ஊடுருவியிருக்கிறது என்பதன் அடையாளம்.

மோசமான அந்த அனுபவத்தைப் பற்றிப் பின்னால் நினைவுகூரும்போது ராமு என்னிடம் சொன்னான், “சகோதரா, இடஒதுக்கீட்டின் காரணமாக நல்ல வேலையைக்கூட ஓரளவு சுலபமாக என்னால் பெற்றுவிட முடியும். ஆனால், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஒரு பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கணும்னா அவளோட அப்பா, அம்மாவை அதுக்குச் சம்மதிக்க வைக்கிறதுக்குத்தான் வாய்ப்பே இல்லை. இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி ஐ.ஏ.எஸ். பதவியை நான் வாங்குனாகூட ஆதிக்கச் சாதிப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்குறது அவ்வளவு சுலபமில்லை.”

சாதி அடுக்கின் மேல்நிலையில், உயரிய அந்தஸ்துடன் இருக்கும் நாமெல்லாம் சாதியைப் பற்றியும் இடஒதுக்கீட்டைப் பற்றியும் பேச ஆரம்பித்தால், பேச்சின் முடிவு ‘இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும்’ என்பதாகத்தான் இருக்கும். நண்பர்களே, சாதிரீதியான பாகுபாடு என்பது நம்மால் நினைத்தே பார்க்க இயலாத அளவுக்குக் கொடுமையானது. இந்த உண்மையை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிப் புரிந்துகொண்டால்தான், ரோஹித் வெமுலாக்கள் ஏன் பிறக்கிறார்கள் என்பதும் ரோஹித் வெமுலாக்கள் ஏன் சாகிறார்கள் என்பதும் ‘மேல்சாதி’ குடும்பங்களில் பிறந்த நமக்குப் புரியும்!

– கரண் ராகவ் ஃபேஸ்புக் பதிவின் மொழிபெயர்ப்பு: தம்பி

நன்றி: தி ஹிந்து தமிழ்
செய்தி:தி ஹிந்து தமிழ்

சாதிக் கொடுமையின் மற்றொரு சாட்சி!

மத்திய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ள ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலைச் சம்பவம் ஏற்படுத்தும் அதிர்ச்சியும் துயரமும் அளவிட முடியாதவை. தகுதியும் திறமையும் மிகுந்தவர்கள் என்று கருதப்படுவோரால் நிர்வகிக்கப்படும் உயர் கல்வி நிறுவனமான இப்பல்கலைக் கழகத்தில் பயிலும் ரோஹித் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். துடிப்பான ஆய்வு மாணவர்.

‘அம்பேத்கர் மாணவர்கள் சங்கம்’ (ஏ.எஸ்.ஏ.) என்ற அமைப்பின் உறுப்பினர். இச்சங்க உறுப்பினர்களுக்கும் சங்கப் பரிவாரத்தைச் சேர்ந்த ‘அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்’ (ஏ.பி.வி.பி.) என்ற அமைப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

பரிஷத் மாணவர்களின் புகாரின்பேரில் ஏ.எஸ்.ஏ. அமைப்பைச் சேர்ந்த ரோஹித் உள்பட 5 மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப் பட்டனர். ‘இந்த 5 மாணவர்களும் பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடரலாம் ஆனால் விடுதிக்கோ, நிர்வாக அலுவலகத்துக்கோ, இதர பொது இடங்களுக்கோ செல்லக்கூடாது’ என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. சமூகரீதியாக பின்னடைவைச் சந்தித்துள்ள சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்தத் தண்டனை அப்பட்டமான சமூகப் புறக்கணிப்பு என்பதில் சந்தேகமில்லை.

இதற்கு எதிராக 5 மாணவர்களும் போராட்டம் நடத்திவந்தனர். இந்த நிலையில்தான் ரோஹித் வெமுலா என்ற அந்த ஆய்வு மாணவர் தன்னுடைய போராட்டத்தையும் வாழ்க்கையையும் ஒரேயடியாக முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறார். தன்னுடைய தற்கொலைக்கு யாரும் பொறுப்போ, காரணமோ அல்ல என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், உண்மை அதுதானா?

அம்பேத்கர் மாணவர்கள் சங்கம் என்ற அமைப்பில் தீவிரவாதிகளும் தேச விரோதிகளும் இடம் பெற்றிருப்பதாகவும் அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேய மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எழுதிய கடிதத்தை அடுத்தே தற்கொலை நடந்தது என்று மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது பண்டாரு தத்தாத்ரேய, ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் பி. அப்பா ராவ் மற்றும் ஏ.பி.வி.பி.யைச் சேர்ந்த 2 தீவிர உறுப்பினர்கள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரோஹித் தின் மரணம் குறித்து மனசாட்சியுடன் விசாரணை நடத்தி உண்மை களைக் கண்டறிய வேண்டும். சாதி ஆதிக்கத்தையும் சாதிப்பாகுபாட்டை யும் தடுக்க நாம் தொடர்ந்து தவறிவருகிறோம் என்ற அவலத்தையே இது இந்திய அரசுக்குப் பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது.

டெல்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ என்கிற அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் பட்டியல் இன, பழங்குடி மாணவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தர சில ஆண்டுகளுக்கு முன்னால் பணிக்கப்பட்ட தோராட் குழு, பல அவலங் களை அம்பலப்படுத்தும் உண்மைகளை வெளிக்கொணர்ந்தது. பட்டியல் இன, பழங்குடி மாணவர்கள் விடுதியின் ஒரு புறத்தில் ஒதுக்கிவைக்கப்படுகின்றனர், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் மற்றவர்களுடன் சமமாகப் பங்கேற்க முடியாமல் ஓரம்கட்டப்படுகின்றனர் என்று அது கூறியிருந்தது.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 18 மாணவர்கள் இப்படி உயர் கல்விக்கூடங்களில் தங்களுக்கு நேர்ந்த அவமானங்களையும் சமூகப் புறக்கணிப்புகளையும் தாங்கிக்கொள்ள முடியாமல் மன அழுத்தத்துக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இந்த அவலத்தை நீக்க வேண்டும் என்றால் முதல் படியாக அரசு, இப்படியொரு நிலை நிலவுகிறது என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும். ஆத்மசுத்தியுடன் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும்!

நன்றி: தி ஹிந்து தமிழ்
செய்தி:தி ஹிந்து தமிழ்

ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் ரோஹித் வெமுலா என்ற தலித் மாணவர் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சமூக படிப்பு துறையில் கடந்த 2 ஆண்டுகளாக பிஹெச்.டி படித்து வந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு மாணவர்களுக்கும், ரோஹித் வெமுலா சார்ந்திருந்த அமைப்பு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு, ரோஹித் வெமுலா உட்பட 5 மாணவர்களை பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கியது. பல்கலைக்கழக விடுதியிலிருந்தும் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை ரோஹித் வெமுலா விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆங்கிலத்தில் அவர் எழுதிய கடைசி கடிதத்தின் தமிழ் வடிவம்:

காலை வணக்கம்,

இந்தக் கடிதத்தை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது நான் இவ்வுலகை விட்டு நீங்கியிருப்பேன். என் மீது கோபம் கொள்ளாதீர். உங்களில் சிலர் என் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தீர்கள், என்னை பரிபூரணமாக நேசித்தீர்கள், என்னை உரிய மரியாதையுடன் நடத்தினீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். பிரச்சினை எனக்குள்தான் இருக்கிறது. என் உடல் வளர்ச்சிக்கும் ஆன்ம வளர்ச்சிக்கும் இடையே நிறையே ஏற்றத்தாழ்வு இருப்பதாக உணர்கிறேன். அது என்னை விகாரப்படுத்திவிட்டது. ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்பதே என் விருப்பம். காரல் சாகன் போல ஓர் அறிவியல் எழுத்தாளனாக வேண்டும் என்பது எனது லட்சியம். ஆனால், என்னால் எழுத முடிந்தது என்னவோ இந்த தற்கொலை கடிதத்தை மட்டுமே…

அறிவியல், நட்சத்திரங்கள், இயற்கை இவையெல்லாம் என் விருப்பத்துக்குரியவை. என் விருப்பப்பட்டியலில் மனிதர்களும் இருக்கின்றனர். அவர்கள் இயற்கையுடனான உறவை எப்போதோ துண்டித்துக் கொண்டனர் என்பதை அறியாமலேயே அவர்களை நான் நேசித்து வந்தேன். நமது உணர்வுகள் எல்லாம் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு நம்மிடம் கடத்தப்பட்டவை, நமது அன்பு கட்டமைக்கப்பட்டவை, நமது நம்பிக்கைகள் சாயம் பூசப்பட்டவை. நாம் என்ற சுயமான ரூபமே ஒரு செயற்கை வடிவமாகிவிட்டது. எள்ளளவும் காயமடையாமல் அன்பை பெறுவது என்பது மிகவும் கடினமாகிவிட்டது.

ஒரு மனிதனின் மதிப்பு, அவனது பிறப்பு அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. சில நேரங்களில் வாக்கு, சில நேரங்களில் எண் பலம், சில நேரங்களில் சில பொருட்கள்கூட அவனது அடையாளத்தை தீர்மானிக்கின்றன. ஒரு மனிதன் எப்போதாவது அவனது ஆன்மாவின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறானா என்றால்? நிச்சயமாக இல்லை.

சில நட்சத்திர துகள்களால் ஒரு பிரம்மாண்டம் சமைக்கப்பட்டதுபோல், மனிதனின் மாண்பு சில அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. கல்வி, அரசியல், சாலைகள், வாழ்வு, சாவு என எல்லாவற்றிலும் இத்தகைய நிர்ணயங்கள் வியாபித்துக் கிடக்கின்றன.

இதுமாதிரியான கடிதத்தை நான் எழுதுவது இதுவே முதன்முறை. ஒரு கடைசி கடிதத்தின் முதல் முயற்சி என்று சொல்லலாம். இது ஒருவேளை அர்த்தமற்றதாக இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.

இந்த உலகம் மீதான எனது புரிதல் தவறாக இருக்கலாம். அன்பு, வலி, வாழ்க்கை, மரணம் இவற்றின் மீதான என் புரிதல்கூட தவறானதாக இருக்கலாம். எனக்கு எந்த அவசரமும் இல்லை; ஆனால் நான் எப்போதுமே அவசரப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறேன். வாழ்க்கையை துவக்குவதற்கு வழி தெரியா தேடலுக்கான அவசரம்.

சிலருக்கு வாழ்க்கை வெறும் சாப வடிவிலானதாக கிட்டுகிறது. எனது பிறப்பு ஒரு பயங்கர விபத்தின் விளைவு. எனது பால்ய பருவ தனிமையில் இருந்து என்னை எப்போதுமே விடுவித்துக் கொள்ள முடிந்ததில்லை. கடந்த காலங்களை திரும்பிப்பார்க்கும்போது யாராலும் போற்றப்படாத ஒரு குழந்தையாகவே எனது பிம்பம் மிஞ்சுகிறது. (நானே எனது வார்த்தைகளை அடித்துவிடுகிறேன்).

இத்தருணத்தில் நான் வேதனைப்படவில்லை, துன்பப்படவில்லை. என்னுள் ஒரு வெற்றிடத்தை நான் உணர்கிறேன். அது பரிதாபத்துக்குரியது. பரிதாபத்தின் உந்துதலால் நான் இதைச் செய்கிறேன்.

இதற்காக நான் கோழை என்று முத்திரை குத்தப்படலாம். சுயநலவாதி என்று சாடப்படலாம். ஏன், முட்டாள் என்று நிந்திக்கப்படலாம். என்னை எப்படி அழைத்தாலும் நான் கவலைப்படப் போவதில்லை. மறுபிறவி கதைகள், பேய்கள், பரிசுத்த ஆவிகள் இவற்றின் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது.

எனக்கு ஒரே ஒரு நம்பிக்கை இருக்கிறது. என் நம்பிக்கையெல்லாம் தொடுவானத்தில் உள்ள நட்சத்திரங்களை அடைய முடியும், வேறு உலகங்களை அறிய முடியும் என்பது மட்டுமே.

இந்தக் கடிதத்தை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் எனக்காக இதை செய்ய முடியும். எனது கல்வி உதவித்தொகை 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடந்த 7 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த உதவித்தொகை என் குடும்பத்தினருக்கு எப்படியாவது கிடைக்க ஏதாவது செய்யுங்கள். ராம்ஜிக்கு நான் ரூ.40,000 தர வேண்டும். ராம்ஜி அந்தப் பணத்தை திருப்பித் தா என்று எப்போதுமே கேட்டதில்லை. இருந்தாலும், ராம்ஜியிடம் அதை கொடுத்துவிடுங்கள்.

எனது இறுதி ஊர்வலம் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறட்டும். நான் தோன்றி மறைந்தேன். அவ்வளவே. அதை இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் சிந்த வேண்டாம். இவ்வுலகில் வாழ்வதைவிட மரணித்தல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். “நிழல் உலகிலிருந்து நட்சத்திரங்களை நோக்கிச் செல்கிறேன்.”

உங்கள் அறையை நான் என் சாவுக்காக பயன்படுத்தியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் உமா அண்ணா.

அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பினர், என்னை பொருத்தருள வேண்டும். நீங்கள் என்னை மிதமிஞ்சிய அளவு நேசித்தீர்கள். தங்கள் எதிர்காலம் செழிக்க என் வாழ்த்துகள்.

இறுதியாக இதை உதிர்க்கிறேன்… ஜெய் பீம்.

நன்றி: தி ஹிந்து தமிழ்
செய்தி:தி ஹிந்து தமிழ்

மூன்று மாதங்கள் கடந்தது, சாப்ட்வேர் வாழ்க்கையின் கனவில் இருந்தவனுக்கு தான் தேர்ந்தெடுக்கப் பட்ட கம்பெனியிடம் இருந்து ஒரு மெயில் வந்தது. அதில் “நாங்கள் உங்களை எங்கள் கம்பெனிக்கு வரவேற்கிறோம். எங்கள் நிறுவனத்திற்குத்  தேர்ந்தெடுத்த உங்களைப் போன்ற பணியாளர்கள் ஒவ்வொருவரையும் ட்ரைனிங்கிற்கு கூப்பிட்ட வண்ணம் உள்ளோம். அதன் படி நீங்கள் இன்னும் இருமாதங்களில் ட்ரைனிங்கில் கலந்து கொள்ளலாம். அதற்க்கான அறிவுப்பு விரைவில் உங்களுக்கு அனுப்பப் படும்” என்ற தகவல் இருந்தது.


இதே போன்றதொரு தகவலை 30 பேர் கொண்ட ஒரு குழுவிற்கு அனுப்பி இருந்தார்கள்.அந்தக் குழுவில் கிருத்திகா என்ற பெண்ணும் ஒருவர். மூர்த்தி இந்த மெயில்லை படித்துக் கொண்டிருக்கும் பொழுதே , ஜிமெயில் சாட்டில் ஒரு அழைப்பு வருகிறது.

கிருத்திகா: ஹாய் மூர்த்தி,,,

here  கிருத்திகா,,,

(நம்ம ஆளு மனதிலே! கண்ணா லட்டு திங்க ஆசையா?!!)

மூர்த்தி : ஹாய் , கிருத்திகா! மூர்த்தி here

கிருத்திகா: 3 மாதம் கழிச்சு இப்போத்தான் முதல் மெயில் அனுப்பி இருக்காங்க?! எப்ப கூப்டுவாங்கனு ஏதாவது ஐடியா இருக்கா?

மூர்த்தி: ஆமாங்க! ஆனா தெரிலையே, கூப்டுவாங்க பயப்படதீங்க!

(மனதில் : இத வச்சுத்தான் என் கனவு வாழ்க்கையே இருக்கு. நம்மை மாதிரி இந்தப் பொண்ணும் பயப்படுதே!)

கிருத்திகா: இல்லைங்க , எங்க வீட்ல marriage பத்தி பேச ஆரம்பிச்சுடுவாங்க இப்டியே லேட் ஆகிட்டே இருந்தது என்றால்!

மூர்த்தி: (என்னது marriage ஆ?!) ஏங்க உங்க ஆளு வைடிங்ஆ marriageக்கு?!

கிருத்திகா: அய்யயோ , லவ்வர் ஆம் இல்லைங்க ,லவ் எனக்கு பிடிக்காதுங்க!!

மூர்த்தி :(அப்படா!!!, ஆளு இல்ல இப்போதைக்கு இது போதும்) ஏங்க ,அப்டி பொதுவா லவ் தப்புன்னு சொல்லிட முடியாதுங்க. நீங்க லவ்வில் விழற மாறி யாரையும் பார்க்கலன்னு சொல்லுங்க!

கிருத்திகா: சரிங்க , அப்பா கூப்பிடறார்!  ஏதாவது அப்டேட் என்றால் மெயில் பண்ணுங்க.

மூர்த்தி: சரிங்க, ஆனா நான் மெயில்ல அவ்ளோவ வர மாட்டேன். வேணா என் நம்பர்க்கு மெசேஜ் அனுப்புங்க
9800000021.
கிருத்திகா:offline
மூர்த்தி:ஹ்ம்ம் , offline போய்டுவாங்களே! என்னம்மா?இப்டி பண்றீங்களேமா!!

கம்பெனி கூப்டலையே என்ற கவலையை மறந்து வழக்கத்திற்கு மாறாக மூர்த்தி இன்று மிகவும் சந்தோசமாக இருந்தான். கிருத்திகாவிடம் பேசியது அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

காலிங்,,,,

ஹலோ மூர்த்தி , டேய் எங்கடா ஆளையே காணாம் ! 3 மாசம் ஆச்சே மச்சி மறுமுனையில் கார்த்திக்!

எங்கடா கம்பெனி இன்னும் கூப்டல , கைல காசே இல்ல மச்சி. நீதான் கால் பண்றது.

பிசினஸ் பிஸிடா அதான்.

மச்சி இன்னைக்கு ஒரு பொண்ணுட்ட பேசினேன்டா! கிருத்திகாடா பேரு!

டேய் செம ,போட்டோ அனுப்பு மச்சி அப்புறம்.

மெயில்ல பேசினேன்டா, நயன்தாரா போட்டோதாண்டா இருந்துச்சு.

ஹ்ம்ம், எதுக்கும் முகம் ஒரு டைம் பார்த்துக்கோடா!

சரிடா சரிடா!!

மச்சி , சார்ஜ் இல்லடா இங்க பவர் கட். அடிக்கடி பவர் கட் ஆகுதுடா .அப்புறம் கூப்பிடுடா என்று சொன்னான் மூர்த்தி!

இதெல்லாம் அரசியல்ல சாதாரணம்டா!! சரிடா , அப்புறம் கால் பண்றேன் என்று விடை பெற்றான் கார்த்திக்.

மீன்கள் நீந்தும்,காத்திருங்கள்!!

படங்கள்: கூகிள்

முந்தைய பதிவிற்கு

கண்ணாடித் தொட்டிக்குள், பல வண்ண மீன்கள்#1

சாதி பற்றி எழுதத் தொடங்கிய பொழுது , மனதில் கேள்விகள் ஆயிரம் எழுந்தது , தேடல் அதிகமானது ,அது சம்பந்தமாக படிக்கவும் தூண்டியது. இதுவரை எழுதியதைப்(பெரிதாக எழுதிவிட வில்லை என்றாலும்!!) படித்த பிறகு நண்பர்கள் சிலர் கேட்ட கேள்விகளை இந்த வாரம் விவாதிக்கலாம் என்று தோன்றியது. இதோ அந்தக் கேள்விகள்!

ஜாதியின் தொடக்கம் எவாள் ஆரம்பித்தார் எனத் தெரிந்தும் , மற்ற ஜாதியினரும் அதற்க்குக் காரணம் என்று கூறுவது சரியா ?

நல்ல கேள்வி. ஜாதியை யார் உருவாக்கினார்கள் என நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியது இல்லை.

அப்படியே அவாள் உருவாக்கி இருந்தாலும் , அன்று அதனால் பாதிக்கப் பட்டு இன்று மேல் நிலையில் உள்ளோர் அன்று தங்களைப் போல இருந்தவர்களை இன்று பாரபட்சமாக நடத்துவது தொடர்வதால். இன்றைய சூழ் நிலையில் ஜாதிய பாடுபகு பார்ப்பதில் பலருக்குத் தொடர்பு உண்டு.

சிலர் உடனே இதற்க்குச்  சாட்சி உண்டா எனக் கேட்கலாம், அய்யா கொஞ்சம் நமது சமூகத்தைக் கவனியுங்கள் உங்களுக்கான பதில் அதிலே இருக்கிறது! இன்றைய சமூகமே அதற்குச் சாட்சி!

இதையும் படிக்க

வே.மதிமாறன் பதிவு

ஜாதியின் அடையாளம் இன்று  பிறப்பைச் சார்ந்து மட்டும்தான் இருக்கிறதா ?

ஜாதி எப்பொழுதோ , ஏதோ ஒரு காரணமாகக் கொண்டு வரப் பட்டு , அது ஒரு அடையாளமாக தொடரும் பொருட்டு, அனைவரும் விருப்பம் இல்லாமலே கட்டாயமாக ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கப் பட்டுள்ளது. அதற்க்கு ஏற்றார் போல பல வலைகள் பின்னப் பட்டுள்ளது.

அன்று செய்யும் தொழில் வைத்துதான் இந்த அடையாளம் என்று சொல்லி இன்று வேறு எது ஏதோ காரணங்களுக்காகப் பின்பற்றப் படுகிறது.

இன்றைய சூழ்நிலையில் ஜாதியின் அடையாளம் பிறப்பைச் சார்ந்து இருப்பதைப் போல பார்த்துக் கொள்ளப் படுகிறது. அது பலரால் இங்கு  மாறாமல் கவனமாக நடைமுறைப் படுத்தப் படுகிறது.

இதையும் படிக்க:

ஊரானின் பதிவு

பணம் இருந்தால் ஜாதி மாறி விடுமா ?

பணம் ஜாதி என்ற வரையறைக்குள் வராதவாறு சிலரால் கவனமாக பார்த்துக் கொள்ளப் பட்டுள்ளது. பணத்திற்கு ஜாதி ,மதம், மொழி என்ற பாகுபாடு இல்லை . பணம் என்றால் பிணம் கூட வாயைப் பிளக்கும் என்பது நம் பழமொழி!

ஒரு வேலை கீழ் ஜாதி என்று சொல்லப் படுபவர்கள் பணமே வைத்து இருந்தாலும் யார் பணம் வைத்துள்ளார்கள் என்றுதான் இந்தச்  சமூகம் பார்க்கும்!

பகுத்தறிவு மூலம் ஜாதியை ஒழித்துவிட முடியாதா?

முடியும். ஆனால் நம்மை பகுத்து அறியாதவாறு பலரால் பார்த்துக் கொள்ளப் படுகிறது. அது கல்வியால் ,வழிபாட்டு முறையால் , அரசியலால் நடைமுறைப் படுத்தப் படுகிறது. இன்று ஜாதி பார்ப்பவன் மெத்தப் படித்தவனாகவும் இருக்கிறான்.

இதையும் படிக்க:

பூசிக் கொள்ள இது சந்தனமல்ல

இட ஒதுக்கீடு பற்றி உங்கள் கருத்து ?

இட ஒதுக்கீடு சரி. ஆனால் அனைத்திற்கும் ஒரு கால அவகாசம் வேண்டும் இல்லையா?
அம்பேத்கர் சட்டம் இயற்றும் பொழுது , “இடஒதுக்கீடு என்பது குறிப்பிட்ட சில சமூகங்கள் (கல்வி , தொழில் உள்ளிட்ட பல அடிப்படை உரிமைகள் மறுக்கப் பட்ட இந்த மண்ணின் மக்கள்)தங்கள் நிலையில் இருந்து மீண்டு வரும் வரை இருக்கும். கொஞ்ச காலங்கள் சென்ற பிறகு இதை மீள் பரிசீலனை செய்யலாம் என்று சொல்லி உள்ளார்” என்று சொல்வார்கள்!

ஆனால் இட ஒதுக்கீடு இன்று வரை இருக்கிறது, அந்த மக்கள் முன்னேறினார்களா?!
இன்றளவும் இட ஒதுக்கீடு தொடர அந்த மக்கள்தான் காரணமா ?
அவர்கள் ஏதோ இட ஒதுக்கீட்டின் பேரில் பலரின் செல்வங்களைக் கொள்ளை  அடித்ததைப் போல நினைப்பவர்கள், பல ஆண்டுகளாக (சுந்திர காலத்துக்கும் முன்பு இருந்தே) அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளைத் தடுத்து இன்று வரை உளவியல் ரீதியாக அவர்களை குறி வைத்தே சமூகத்தை நகர்த்தி வருவதை என்னவென்று சொல்ல , அதை எதில் கொண்டு போய்ச் சேர்க்க!

ஒரு வேளை அவர்கள் யாரேனும் ” இட ஒதுக்கீடு இல்லாமலே எங்கள் அடிப்படை உரிமைகளை ஏன் தடுத்தீர்கள் என்று கேட்டால்” உங்கள் பதில் என்ன?

இன்று தாழ்ந்த ஜாதி என்று  (சிலரால் கட்டாயமாக சொல்லப் பட்டவர்கள்)  ஒதுக்கி வைக்கப் பட்டவர்கள் நால் வகை வர்ணங்களைத் தீர்மானித்து இருக்கக் கூடிய சூழ்நிலையை அன்று பெற்று இருந்திருந்தால்?!!

சமுதாயத்தில் ஒவ்வொருவரும் வளரும் பட்சத்தில் கொண்டுவரப் படும் எதுவும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஏனெனில் எல்லோரும் ஒன்றிணைந்ததுதான் சமுதாயம். ஆனால் ஏதோ ஒரு சிலர் உயர்வதும் , சிலர் தாழ்ந்து போவதும் ஜாதியால் என்றால்.  அது ஏற்றத் தாழ்வு ! அது சமதர்ம , சமுதாயம் அல்ல. அது எப்படி சரி என்று  ஆகும்?  ஆக எங்கோ தவறு உள்ளது,சிந்தியுங்கள்!!

                                                மேலும் தொடர்கிறேன்! காத்திருக்கவும்!!

முந்தைய பதிவிற்கு : சதி-சாதி-சா”தீ”!?!!#2

படங்கள்: கூகிள்
நன்றி:மதிமாறன் ப்ளாக்,ஊரான் ப்ளாக்,சுந்தர் காந்தி ப்ளாக்

சில கட்டுரைகள்

சாதி பற்றி எழுதத் தொடங்கியவுடன் ,அதைப் பற்றி  நிறைய படிக்க வேண்டும்.படித்த பிறகே எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதன் விளைவாக தி ஹிந்து தமிழ் நாளிதழ் மற்றும் சில ப்ளாக்கில் வெளியான பின்வரும்  கட்டுரைகளைப் படித்தேன்.

என்னவாகட்டுமே, உண்மை வெளிவரட்டும்! -சமஸ் ப்ளாக்

எல்லாப் பார்ப்பனர்களையும் ஒழித்துவிடுவோம், சாதி அழிந்துவிடுமா? -சமஸ் ப்ளாக்

காதல், சாதி, கவுரவம் மற்றும் தண்டவாளம் -சந்திர மோகன், தி தமிழ் ஹிந்து நாளிதழ்

மாணவர்கள் சாதியின் பகடைக்காய்களா?-சந்திர சரவணன்,தி தமிழ் ஹிந்து நாளிதழ்

இவற்றில் இருந்து சாதியைப் பற்றி கொஞ்சம் புரிதல் கிடைத்தது.

அவர்களுக்கு என் நன்றிகள்! கூடவே நண்பர்கள் சிலரும் இது தொடர்பான தகவல்கள் தந்து உதவினார்கள். அனைவருக்கும் நன்றி!!

கல்வியும் ,ஜாதியும்

உலகமே வேற்று கிரகம் , அதில் குடியேற்றம் என எதைப் பற்றியோ சிந்திக்கும் பொழுதும் , எழுதும் பொழுதும் நாம் மட்டும் இந்த சாதியைப் பிடித்துக் கொண்டு வாழ்வது என்பது எவ்வளவு அபத்தம். முதல் பதிவில் “கல்வி சாதியை மாற்றி விடுமா” என்று முடித்து இருந்தேன் , அதில் இருந்தே மேலும் தொடர்கிறேன்.

ஓரளவிற்கு ,ஏன் பள்ளி செல்லும் வரையிலும் நானும் கல்விதான் ஜாதிய பாகுபாட்டிற்கு மாற்று என்றுதான் நினைத்து இருந்தேன். ஆனால் கல்லூரி சென்ற பிறகு அது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்று தெரிந்து கொண்டேன் .கல்வி சிந்திக்க வைப்பது உண்மைதான்.ஆனால் ஜாதியம் அந்த சிந்தனையைத் தாண்டிய ஒரு போதை நிலை என்பதை புறச் சூழல் விளக்கியது.

படி(பிடி)த்தவர்கள்

இன்று சமூக வலைதளிங்களில் முகநூல் , வாட்ஸ் அப் ,ட்விட்டர் எல்லாம் மிகப் பிரபலம். அதில் எத்தனை பேரு தங்கள் புகைப்படங்களுக்குப் பதிலாக தங்கள் ஜாதியின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் படங்கள் வைத்து இருக்கிறார்கள் என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியது இல்லை.அவர்கள் அனைவரும் படித்தவர்கள் என்பதை நாம் எப்படி எடுத்துக் கொள்வது ? முன்னேற்றம் என்றா ? இவர்கள் படித்தவர்கள் அல்ல ஜாதியைப் பற்றாகப் பிடித்தவர்கள்!!

பார்ப்பனியம் மட்டுமா?

ஜாதி என்று சொல்லும் பொழுதெல்லாம் பார்ப்பனியமும் வந்து போகும் , இதைத் தவிர்த்து விட்டு ஜாதியைப் பற்றி பேசி விட முடியாது. சமஸ் அவர்களின் “எல்லாப் பார்ப்பனர்களையும் ஒழித்துவிடுவோம், சாதி அழிந்துவிடுமா?” என்ற கட்டுரை படித்த பிறகுதான் தெரிந்தது. பார்ப்பனியம் தொடங்கி வைத்ததை இன்று மற்றவர்கள் அழிந்து விடாமல் காக்கிறார்கள் என்று.ஆக இன்றைய சூழலில் இங்கே பலருக்கும் இதில் பங்கு உண்டு!

இப்படியும் இருந்திருக்கலாம் !

ஜாதியின் தோற்றம் எப்பொழுது என்று தெரியவில்லை (ஆராய்வோம்!). ஆனால் அந்தக்  காலத்தில் ஒரு காலணி ஆதிக்க மனப் பான்மை இருந்தது. ஒவ்வொருவரும் தங்களைப்  பாதுகாத்துக் கொள்ள வேண்டி இருந்தது .அதனால் ஜாதியை ஒரு கருவியாகக் கையாண்டு இருக்கலாம் .ஆனால் இன்றும் அது தேவையா என்பதே நம் முன் நிற்கும் கேள்வி?! சிந்திப்போம்!!

சமூகம்

சமூகம் என்ற கட்டமைப்பிற்குள் வந்த பிறகு ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டும் என்பது எழுதப் படாத விதி.அதற்க்குள்  விரிசல் விழ வைப்பதுதான் இந்த ஜாதி உள்ளிட்ட பாகுபாடுகள்! பணப் புழக்கம் எந்த வித பேதமும் இன்றி  இங்கே எளிதாக நுழையும் சமுதாயத்தில் மனிதர்கள் தங்களுக்குள் பரஸ்பரமாக நடந்து கொள்ள ஜாதி மட்டும் தடையாக இருப்பது வேடிக்கை!


என்னே சாமர்த்தியம்?

இவர்கள் தாழ்ந்த ஜாதி என்று சொல்லிவிட்டு அவர்களின் பணத்தையோ , உழைப்பையோ உபயோகப் படுத்திக் கொள்வதை என்னவென்று சொல்வது? பணத்தில் ,உழைப்பில் ஜாதி இல்லையா?!

இங்கே என் நண்பர் சொன்ன ஒரு தகவலைச் சொன்னால் மிகச் சரியாக இருக்கும்.ஆம் இதோ அந்தத் தகவல் உங்களுக்கும்!

நடிகவேள் M R .ராதா அவர்களின் படத்தில் ஒரு காட்சி வரும். கீரை விற்பவரிடம் MR.ராதா மனைவி கீரையை வாங்கிக் கொண்டு நேராக வீட்டிற்குள் வந்து விடுவார்.அதைப் பார்க்கும் MR .ராதா , தண்ணி தெளித்து எடுத்துட்டுப் போடி தீட்டுப் பட்டுவிடும் என்று சொல்லுவார். அடுத்து சில நொடிகளில் யாரோ ஒருவர் வந்து அவர் மனைவியிடம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுப்பார்கள் .அதை எடுத்துக் கொண்டு போகும் பொழுது அவர் மனைவி அதில் தண்ணீர் தெளிப்பார்கள் , உடனே M R .ராதா சொல்லுவார் “என்னடி பண்ற ? பணத்துக்கு ஏன்டி தண்ணீர் தெளிக்கற ?அதுக்கு தீட்டு என்று எதுவும் இல்லை” என்று !

இதைக் கேட்டதும் “அட பாரதி சொன்ன வேடிக்கை மனிதர்களே(அனைவரையும் அல்ல)!! உங்களின் சதிதான் இந்த சாதியா?!” என்று நினைக்கத் தோன்றியது.

விகடனின்  “வலைபாயுதே”வில் படித்தது என நண்பர் ஒருவர் வாட்ஸ் அப்பில் நண்பர் ஒருவர் பகிர்ந்து கொண்ட கவிதையைச் சொல்லி இந்த பதிவை இங்கே நிறைவு செய்கிறேன்!

இங்கே சாதிகள்ஒழியவில்லை!
ஒளிந்திருக்கின்றன!!

இதில் உங்களுக்கும் மறுப்பு இருக்காது என்று நம்புகிறேன்!

மேலும் தொடர்கிறேன்! காத்திருக்கவும்!!
படங்கள்:கூகிள்

நன்றி: விகடன், தி தமிழ் ஹிந்து, சமஸ் ப்ளாக்,வாட்ஸ் அப்,கூகிள் இமேஜ்

முந்தைய பதிவிற்கு!

சதி-சாதி-சா”தீ”!?!!#1