Posts Tagged ‘Kodampakkammovie’

நம்மைச் சுற்றி நடக்கும் பல குற்றங்கள்தான் கதை (மருந்து கம்பெனிகளின் உலகச் சந்தை, அதை வைத்து நடக்கும் குற்றங்கள்),அதனை ஹீரோ தானே தேடிச் சென்று எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதுதான் திரைக் கதை. ஆம் தினசரி குற்றங்களாக நாளிதழ்களில் நாம் படித்ததும் ,டிவிக்களில் நாம் கேட்டதையும் சுபாவுடன் சேர்ந்து கதையாகக் கொடுத்து , அதைத் திரைக் கதையில் வெற்றியடையச் செய்துள்ளார் ஜெயம் ராஜா என்கிற இயக்குனர் மோகன் ராஜா ( ஜெயம் ரவி அண்ணன்தான்பா -குழப்பிக்காதீங்க! புதுசா கேட்ட பெயர் மாறி இருக்கு என்று நினைத்து!!).

File:Thani Oruvan.jpg

கொஞ்ச நாளைக்குப் பிறகு மீண்டும் திரையில் அரவிந்த்சாமி! நடிப்பில் அசத்தியுள்ளார். பிசினஸ் பக்கம் போகாம தொடர்ந்து  நடித்து இருந்திருக்கலாம் (எப்போதாவது மட்டும் நடிக்காம)என்ற எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி உள்ளார்.பெரிய மிரட்டல் இல்லை ஆனால்  அமைதியான ,அதே வேளையில் அசுர குணத்துடன் , புத்திசாலித் தனத்துடனும் கூடிய வில்லன் இவர். பல இடங்களில் அவரின் சிரிப்பே நடித்து விடுகிறது! வில்லன்தான் என்றாலும் ஹீரோ ,ஹீரோயின் போல மனதில் நிற்கிறார்.அவரைச் சுற்றித்தான் கதையே! ஆனாலும் கிளைமாக்ஸ் சீன்ல (நீங்க நல்லவரா கெட்டவரா என்று கேட்க வச்சுடுவார்!!) செம மாஸ் காட்டி இருக்கிறார்!!

படத்தில் வில்லனுக்குத்தான் அறிமுகக்  காட்சி!! அதுவும் மாஸ்(கொஞ்சம் சினிமாத்தனம்)! தனக்கு மூன்று பினாமிகள்; கூடவே அப்பாவி அப்பா இவர்களை வைத்துக் கொண்டு பெரிய குற்றங்களைச் செய்கிறார் அரவிந்த் சாமி. அந்தப் பெரிய குற்றங்கள் சிறு சிறு குற்றங்களாக சிறுவயதில் இருந்தே ஆரம்பித்து விடுகிறது!ஆனால் சிறு வயது பையனுக்கு ஏன் இந்த குற்ற எண்ணம் என்று தோன்றினாலும், ஏன் இருக்கக் கூடாது என்பதற்கு நம் சமூகத்தையே உதாரணமாகக் காட்டுகிறார் இயக்குனர்.

நாசர் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. சந்தர்ப்ப அரசியல்வாதியாக (அமைதிப் படை மணிவண்ணன் என்று சொல்லலாம்) நடித்து உள்ளார். அரவிந்த் சாமிக்கு அப்பாவி அப்பாவாக தம்பி ராமையா(சினிமாத்தனமான அப்பாவி)! சீரியஸ் ஆன இடங்களிலும் வசனத்தாலும் , உடல் மொழியாலும் நம்மை சிரிக்க வைக்கிறார். கடைசியில் பாசத்திலும் கச்சிதமாக நடித்துள்ளார்.

போலிஸ் அதிகாரியாக ஜெயம் ரவி! ட்ரைனிங் போதே சமூக ரவுடிகளை  நண்பர்களுடன் (நண்பர்களாக நடித்தவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்)சேர்ந்து  துவம்சம் பண்ணுகிறார். ஜெயம் ரவி போலிஸ் அதிகாரி என்று பக்கம் பக்கமாக பேசி நம்மை வெறுப்பெல்லாம் செய்வதில்லை. கதைக்குத் தேவையானதை பேசி இருக்கிறார்!

இயல்பாக அதேவேளையில் பஞ்ச்ஆக  இருக்கிறது பட வசனங்கள். “நாம் என்ன செய்கிறோம் என்பதை நாளை வளரும் இளம் சிட்டுக்கள் கவனிக்கிறார்கள் ,நாம பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்”- என்று நயன்தாராவிடம் சொல்லும் பொழுதும் , நயன்தாரா காதல் சொல்லும் பொழுது பிடித்த மாறியும் , பிடிக்காத மாறியும் நடந்து கொள்வது, அரசியல்வாதிகளின் தலை எழுத்தை தீர்மானிப்பது பெரு வியாபாரிகள், ஆசையில் பேராசை என்பது எனக்கு நல்லது செய்வதில் இருக்கிறது என்று சமூக அக்கறையுடன் கர்ஜிப்பதிலும், ஹீரோயின்களை காப்பாற்றுவதிலும், நண்பர்களுக்கு, காதலிக்கு  பிரச்னை என்றால் வேதனைப் படுவதிலும், சமூக அக்கறை உள்ளவனின் பிடிவாதம் எப்படி இருக்கும் என்பதிலும் நேர்த்தியாக நடித்துள்ளார் ஜெயம் ரவி( தம்பி என்று பாரமால் இயக்குனர் நல்ல வேலை வாங்கி உள்ளார்!). ஜெயம் ரவியின் நடிப்பிற்கு நல்ல தீனி.

அரவிந்த் சாமி போன்ற வில்லன்களுக்கு ஒரு ஹீரோ எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறார். உன் எதிரியைச் சொல் ,நீ யார் என்று சொல்கிறேன் என்பதற்குத் தேவையான தகுதியை சிறுவயதில் இருந்தே வளர்த்துக் கொள்ளும் ஜெயம் ரவி , அவரைத் தேடிச் சென்று மோதுகிறார். ஒரு கட்டத்தில் தன் பிரச்சனைகளுக்குக் காரணம் ஜெயம் ரவி என்று தெரிய வர , இருவருக்குமிடையே என்ன நடக்கிறது , யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை விறு விறுப்பாக திரையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர்!

நயன்தாரா! நயன்தாராவிற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. தியேட்டரில் அவரின் அறிமுகத்திற்கு கைதட்டலும் , விசில் சத்தமும் பறக்கிறது. அதே சமயம் நல்ல வசனத்திற்கும், ரசிகர்கள் அப்டியே நடந்தது கொண்டது கொஞ்சம் ஆரோக்கியம். ஜெயம் ரவிக்கு காதல் சொல்லும் பொழுதும், ஜெயம் ரவிக்கு உதவி தேவைப் படும் பொழுது  அவர் பேசுகின்ற வசனம் ஆகட்டும், ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி வேதனையில் இருக்கும் பொழுது நயன்தாரா பேசுகின்ற வசனம் போன்ற ஒவ்வொரு இடத்திலும் நயன்தாரா நினைவில் நிற்கிறார். இரண்டாவது பாதியில் அவருக்கு என்றே ஒரு பாடலை நுழைத்து இருக்கிறார்கள்! அந்தப் பாடல் இல்லாமலும் படம் நன்றாகவே இருந்து இருக்கும். படத்தில் அவ்வளவு விறுவிறுப்பு(வெறுப்பில்லா விறுவிறுப்பு!!)

ஹிப்ஹாப் தமிழனின் இசை ஓகே! சினிமாட்டோகிராபி ராம்ஜி,எடிட்டிங் சூர்யா (எடிட்டிங் நன்றாக இருந்தது) இனி  ஜெயம் ராஜா “ரீமேக் ராஜா” இல்லை, இவரா இது என்று பிண்ணி எடுத்துள்ளார்; அதற்காக அவர்க்கு  சபாஷ் போடலாம்!

நல்ல வேளை இந்தப் படத்தை ரஜினி,அஜித்,விஜய் என்று யாரும் நடிக்க வில்லை. நடித்து இருந்தால் ஹீரோக்கள் கொண்டாடப் பட்டு இருப்பார்கள். ஜெயம் ரவி இந்தக் கதைக்கு ஏற்ற ஹீரோ! அதனால் கதையும் நினைவில் நிற்கிறது!!

மொத்தத்தில் இது ஒரு நல்ல படம்( உலகத்தரமானாதா என்று நீங்கள் கேட்பது கேட்கிறது , உலகத்தின் தரம் பற்றி தெரியாது ;ஆனால் இது இந்த மண்ணிற்க்கான படம்).எல்லோரும் பார்க்க வேண்டிய ப(பா)டம்.

படங்கள்: விக்கிபீடியா , கூகிள்