Posts Tagged ‘castesystem’

தேர் எரிந்து அணைந்தும்
அணையவில்லை சாதித்”தீ”!

ஜாதியை எப்படி ஒழிக்கலாம்?!

ஜாதிய உணர்வு என்பது எல்லோரிடத்திலும் உள்ளது. அதனை ஒழிக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் முயற்சி செய்தால் எதிர் கால சந்ததி நன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அது உடனடி நிகழ்வல்ல!

ஜாதிய ஒழிப்பு என்று பேசினாலே அம்பேத்கர் கூறிய அகமண திருமண முறை பற்றி எல்லோருக்கும் நினைவு வரும். ஜாதி மாற்றித் திருமணம் செய்வதுதான் அது. அப்படிச் செய்தால் ஜாதி ஒழியும்.

பெரியார் முன் வைத்த அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம்.

அனைவரும் கோவிலில் வழிபடும் முறை.

தீண்டாமை பெருங்குற்றம் என்ற விழிப்புணர்வு.

ஜாதி பற்றிய புரிதலை குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். ஜாதி என்றால் என்ன?ஏன் அது வந்தது?எப்படி வந்தது? அதனால் உண்மையில் நன்மை உண்டா ? யாருக்கு அதிலே நன்மை என்று சொல்லிக் கொடுக்க வேண்டும் .

நம் ஜாதி உயர்ந்தது என்று சொல்லிக் கொடுப்பதில் தவறில்லை, அதே சமயம் மற்ற ஜாதி தாழ்ந்தது என்று சொல்லிக் கொடுப்பது தவிர்க்கப் பட வேண்டும் .

நீ என்ன ஜாதி என்று  கேட்பவர்களை தனிமைப் படுத்த வேண்டும்.

கலப்புத் திருமணங்களை ஆதரிக்க வேண்டும்.

ஜாதிய வன்முறைகளைத் தூண்டிவிடும்  கட்சிகளைத்  தடை செய்ய வேண்டும்.

ஜாதி சங்ககங்களுக்கு கட்டுப் பாடுகளுடன் கூடிய கண்காணிப்பு வேண்டும்.

பள்ளி , கல்லூரிகளுக்கு ஜாதிப் பெயர்களை சூட்டுவதை தடை செய்ய வேண்டும்.

ஜாதிய வன்முறைகளின் தீமைககள்  பள்ளிக் , கல்லூரிப்  பாடங்களாக வேண்டும்.

மேல் நிலைப் பள்ளி வரை ஜாதிச் சான்றிதழ் கேட்க கூடாது.

ஜாதிய இட ஒதுக்கீட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதார ஒதுக்கீட்டுக்கு வர வேண்டும்.

சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை உறுதிப் படுத்த வேண்டும்.

கவுரவக் கொலைகளுக்குத் கடுமையான தண்டனை தர வேண்டும்.

ஜாதிய வன்முறையத் தூண்டுபவர்களுக்குத் ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்குத் தண்டனையை அதிகப் படுத்த வேண்டும்.

பெரியார் பரிந்துரைத்த பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயர் வைப்பதைத் தடை செய்ய வேண்டும்.

பெற்றோரின் வளர்ப்பு என்பது இதிலே மிக முக்கியம். பெற்றோர்கள் சமூகப் பொறுப்புடன் இருந்தால் நல்லது.

வெறும் கல்வியோ , விழிப்புணர்வோ இதனைச் செய்து விட முடியாது.

ஜாதி என்ற போதையைத் தாண்டி சிந்திக்க வேண்டும்.

இளைஞர்கள் எல்லாவற்றிக்கும் வெளிநாட்டு கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறார்கள். ஜாதி என்ற கோட்பாட்டிலும் அதனைப் பின்பற்ற வேண்டும்.

எல்லோரும் சேர்ந்ததுதான் சமுதாயம்.

ஜாதியின் பெயரால் போட்டி அரசியல் நடத்துவதை அரசியல் கட்சிகள் கைவிட வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு இதில் பெரும் பங்கு உண்டு .

ஏற்றத் தாழ்வான சமுதாய முனேற்றம் என்பது , எப்பொழுதும் பிரச்சனையே என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாளைய சமூகம் தங்களுக்குள்ளே தனித் தீவாய்ப் போய்விடும்.

மேலும் தொடர்கிறேன்! காத்திருக்கவும்!!

படங்கள்: கூகிள்

முந்தைய பதிவிற்கு :சதி-சாதி-சா”தீ”!?!!#3

சாதி பற்றி எழுதத் தொடங்கிய பொழுது , மனதில் கேள்விகள் ஆயிரம் எழுந்தது , தேடல் அதிகமானது ,அது சம்பந்தமாக படிக்கவும் தூண்டியது. இதுவரை எழுதியதைப்(பெரிதாக எழுதிவிட வில்லை என்றாலும்!!) படித்த பிறகு நண்பர்கள் சிலர் கேட்ட கேள்விகளை இந்த வாரம் விவாதிக்கலாம் என்று தோன்றியது. இதோ அந்தக் கேள்விகள்!

ஜாதியின் தொடக்கம் எவாள் ஆரம்பித்தார் எனத் தெரிந்தும் , மற்ற ஜாதியினரும் அதற்க்குக் காரணம் என்று கூறுவது சரியா ?

நல்ல கேள்வி. ஜாதியை யார் உருவாக்கினார்கள் என நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியது இல்லை.

அப்படியே அவாள் உருவாக்கி இருந்தாலும் , அன்று அதனால் பாதிக்கப் பட்டு இன்று மேல் நிலையில் உள்ளோர் அன்று தங்களைப் போல இருந்தவர்களை இன்று பாரபட்சமாக நடத்துவது தொடர்வதால். இன்றைய சூழ் நிலையில் ஜாதிய பாடுபகு பார்ப்பதில் பலருக்குத் தொடர்பு உண்டு.

சிலர் உடனே இதற்க்குச்  சாட்சி உண்டா எனக் கேட்கலாம், அய்யா கொஞ்சம் நமது சமூகத்தைக் கவனியுங்கள் உங்களுக்கான பதில் அதிலே இருக்கிறது! இன்றைய சமூகமே அதற்குச் சாட்சி!

இதையும் படிக்க

வே.மதிமாறன் பதிவு

ஜாதியின் அடையாளம் இன்று  பிறப்பைச் சார்ந்து மட்டும்தான் இருக்கிறதா ?

ஜாதி எப்பொழுதோ , ஏதோ ஒரு காரணமாகக் கொண்டு வரப் பட்டு , அது ஒரு அடையாளமாக தொடரும் பொருட்டு, அனைவரும் விருப்பம் இல்லாமலே கட்டாயமாக ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கப் பட்டுள்ளது. அதற்க்கு ஏற்றார் போல பல வலைகள் பின்னப் பட்டுள்ளது.

அன்று செய்யும் தொழில் வைத்துதான் இந்த அடையாளம் என்று சொல்லி இன்று வேறு எது ஏதோ காரணங்களுக்காகப் பின்பற்றப் படுகிறது.

இன்றைய சூழ்நிலையில் ஜாதியின் அடையாளம் பிறப்பைச் சார்ந்து இருப்பதைப் போல பார்த்துக் கொள்ளப் படுகிறது. அது பலரால் இங்கு  மாறாமல் கவனமாக நடைமுறைப் படுத்தப் படுகிறது.

இதையும் படிக்க:

ஊரானின் பதிவு

பணம் இருந்தால் ஜாதி மாறி விடுமா ?

பணம் ஜாதி என்ற வரையறைக்குள் வராதவாறு சிலரால் கவனமாக பார்த்துக் கொள்ளப் பட்டுள்ளது. பணத்திற்கு ஜாதி ,மதம், மொழி என்ற பாகுபாடு இல்லை . பணம் என்றால் பிணம் கூட வாயைப் பிளக்கும் என்பது நம் பழமொழி!

ஒரு வேலை கீழ் ஜாதி என்று சொல்லப் படுபவர்கள் பணமே வைத்து இருந்தாலும் யார் பணம் வைத்துள்ளார்கள் என்றுதான் இந்தச்  சமூகம் பார்க்கும்!

பகுத்தறிவு மூலம் ஜாதியை ஒழித்துவிட முடியாதா?

முடியும். ஆனால் நம்மை பகுத்து அறியாதவாறு பலரால் பார்த்துக் கொள்ளப் படுகிறது. அது கல்வியால் ,வழிபாட்டு முறையால் , அரசியலால் நடைமுறைப் படுத்தப் படுகிறது. இன்று ஜாதி பார்ப்பவன் மெத்தப் படித்தவனாகவும் இருக்கிறான்.

இதையும் படிக்க:

பூசிக் கொள்ள இது சந்தனமல்ல

இட ஒதுக்கீடு பற்றி உங்கள் கருத்து ?

இட ஒதுக்கீடு சரி. ஆனால் அனைத்திற்கும் ஒரு கால அவகாசம் வேண்டும் இல்லையா?
அம்பேத்கர் சட்டம் இயற்றும் பொழுது , “இடஒதுக்கீடு என்பது குறிப்பிட்ட சில சமூகங்கள் (கல்வி , தொழில் உள்ளிட்ட பல அடிப்படை உரிமைகள் மறுக்கப் பட்ட இந்த மண்ணின் மக்கள்)தங்கள் நிலையில் இருந்து மீண்டு வரும் வரை இருக்கும். கொஞ்ச காலங்கள் சென்ற பிறகு இதை மீள் பரிசீலனை செய்யலாம் என்று சொல்லி உள்ளார்” என்று சொல்வார்கள்!

ஆனால் இட ஒதுக்கீடு இன்று வரை இருக்கிறது, அந்த மக்கள் முன்னேறினார்களா?!
இன்றளவும் இட ஒதுக்கீடு தொடர அந்த மக்கள்தான் காரணமா ?
அவர்கள் ஏதோ இட ஒதுக்கீட்டின் பேரில் பலரின் செல்வங்களைக் கொள்ளை  அடித்ததைப் போல நினைப்பவர்கள், பல ஆண்டுகளாக (சுந்திர காலத்துக்கும் முன்பு இருந்தே) அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளைத் தடுத்து இன்று வரை உளவியல் ரீதியாக அவர்களை குறி வைத்தே சமூகத்தை நகர்த்தி வருவதை என்னவென்று சொல்ல , அதை எதில் கொண்டு போய்ச் சேர்க்க!

ஒரு வேளை அவர்கள் யாரேனும் ” இட ஒதுக்கீடு இல்லாமலே எங்கள் அடிப்படை உரிமைகளை ஏன் தடுத்தீர்கள் என்று கேட்டால்” உங்கள் பதில் என்ன?

இன்று தாழ்ந்த ஜாதி என்று  (சிலரால் கட்டாயமாக சொல்லப் பட்டவர்கள்)  ஒதுக்கி வைக்கப் பட்டவர்கள் நால் வகை வர்ணங்களைத் தீர்மானித்து இருக்கக் கூடிய சூழ்நிலையை அன்று பெற்று இருந்திருந்தால்?!!

சமுதாயத்தில் ஒவ்வொருவரும் வளரும் பட்சத்தில் கொண்டுவரப் படும் எதுவும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஏனெனில் எல்லோரும் ஒன்றிணைந்ததுதான் சமுதாயம். ஆனால் ஏதோ ஒரு சிலர் உயர்வதும் , சிலர் தாழ்ந்து போவதும் ஜாதியால் என்றால்.  அது ஏற்றத் தாழ்வு ! அது சமதர்ம , சமுதாயம் அல்ல. அது எப்படி சரி என்று  ஆகும்?  ஆக எங்கோ தவறு உள்ளது,சிந்தியுங்கள்!!

                                                மேலும் தொடர்கிறேன்! காத்திருக்கவும்!!

முந்தைய பதிவிற்கு : சதி-சாதி-சா”தீ”!?!!#2

படங்கள்: கூகிள்
நன்றி:மதிமாறன் ப்ளாக்,ஊரான் ப்ளாக்,சுந்தர் காந்தி ப்ளாக்

சில கட்டுரைகள்

சாதி பற்றி எழுதத் தொடங்கியவுடன் ,அதைப் பற்றி  நிறைய படிக்க வேண்டும்.படித்த பிறகே எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதன் விளைவாக தி ஹிந்து தமிழ் நாளிதழ் மற்றும் சில ப்ளாக்கில் வெளியான பின்வரும்  கட்டுரைகளைப் படித்தேன்.

என்னவாகட்டுமே, உண்மை வெளிவரட்டும்! -சமஸ் ப்ளாக்

எல்லாப் பார்ப்பனர்களையும் ஒழித்துவிடுவோம், சாதி அழிந்துவிடுமா? -சமஸ் ப்ளாக்

காதல், சாதி, கவுரவம் மற்றும் தண்டவாளம் -சந்திர மோகன், தி தமிழ் ஹிந்து நாளிதழ்

மாணவர்கள் சாதியின் பகடைக்காய்களா?-சந்திர சரவணன்,தி தமிழ் ஹிந்து நாளிதழ்

இவற்றில் இருந்து சாதியைப் பற்றி கொஞ்சம் புரிதல் கிடைத்தது.

அவர்களுக்கு என் நன்றிகள்! கூடவே நண்பர்கள் சிலரும் இது தொடர்பான தகவல்கள் தந்து உதவினார்கள். அனைவருக்கும் நன்றி!!

கல்வியும் ,ஜாதியும்

உலகமே வேற்று கிரகம் , அதில் குடியேற்றம் என எதைப் பற்றியோ சிந்திக்கும் பொழுதும் , எழுதும் பொழுதும் நாம் மட்டும் இந்த சாதியைப் பிடித்துக் கொண்டு வாழ்வது என்பது எவ்வளவு அபத்தம். முதல் பதிவில் “கல்வி சாதியை மாற்றி விடுமா” என்று முடித்து இருந்தேன் , அதில் இருந்தே மேலும் தொடர்கிறேன்.

ஓரளவிற்கு ,ஏன் பள்ளி செல்லும் வரையிலும் நானும் கல்விதான் ஜாதிய பாகுபாட்டிற்கு மாற்று என்றுதான் நினைத்து இருந்தேன். ஆனால் கல்லூரி சென்ற பிறகு அது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்று தெரிந்து கொண்டேன் .கல்வி சிந்திக்க வைப்பது உண்மைதான்.ஆனால் ஜாதியம் அந்த சிந்தனையைத் தாண்டிய ஒரு போதை நிலை என்பதை புறச் சூழல் விளக்கியது.

படி(பிடி)த்தவர்கள்

இன்று சமூக வலைதளிங்களில் முகநூல் , வாட்ஸ் அப் ,ட்விட்டர் எல்லாம் மிகப் பிரபலம். அதில் எத்தனை பேரு தங்கள் புகைப்படங்களுக்குப் பதிலாக தங்கள் ஜாதியின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் படங்கள் வைத்து இருக்கிறார்கள் என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியது இல்லை.அவர்கள் அனைவரும் படித்தவர்கள் என்பதை நாம் எப்படி எடுத்துக் கொள்வது ? முன்னேற்றம் என்றா ? இவர்கள் படித்தவர்கள் அல்ல ஜாதியைப் பற்றாகப் பிடித்தவர்கள்!!

பார்ப்பனியம் மட்டுமா?

ஜாதி என்று சொல்லும் பொழுதெல்லாம் பார்ப்பனியமும் வந்து போகும் , இதைத் தவிர்த்து விட்டு ஜாதியைப் பற்றி பேசி விட முடியாது. சமஸ் அவர்களின் “எல்லாப் பார்ப்பனர்களையும் ஒழித்துவிடுவோம், சாதி அழிந்துவிடுமா?” என்ற கட்டுரை படித்த பிறகுதான் தெரிந்தது. பார்ப்பனியம் தொடங்கி வைத்ததை இன்று மற்றவர்கள் அழிந்து விடாமல் காக்கிறார்கள் என்று.ஆக இன்றைய சூழலில் இங்கே பலருக்கும் இதில் பங்கு உண்டு!

இப்படியும் இருந்திருக்கலாம் !

ஜாதியின் தோற்றம் எப்பொழுது என்று தெரியவில்லை (ஆராய்வோம்!). ஆனால் அந்தக்  காலத்தில் ஒரு காலணி ஆதிக்க மனப் பான்மை இருந்தது. ஒவ்வொருவரும் தங்களைப்  பாதுகாத்துக் கொள்ள வேண்டி இருந்தது .அதனால் ஜாதியை ஒரு கருவியாகக் கையாண்டு இருக்கலாம் .ஆனால் இன்றும் அது தேவையா என்பதே நம் முன் நிற்கும் கேள்வி?! சிந்திப்போம்!!

சமூகம்

சமூகம் என்ற கட்டமைப்பிற்குள் வந்த பிறகு ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டும் என்பது எழுதப் படாத விதி.அதற்க்குள்  விரிசல் விழ வைப்பதுதான் இந்த ஜாதி உள்ளிட்ட பாகுபாடுகள்! பணப் புழக்கம் எந்த வித பேதமும் இன்றி  இங்கே எளிதாக நுழையும் சமுதாயத்தில் மனிதர்கள் தங்களுக்குள் பரஸ்பரமாக நடந்து கொள்ள ஜாதி மட்டும் தடையாக இருப்பது வேடிக்கை!


என்னே சாமர்த்தியம்?

இவர்கள் தாழ்ந்த ஜாதி என்று சொல்லிவிட்டு அவர்களின் பணத்தையோ , உழைப்பையோ உபயோகப் படுத்திக் கொள்வதை என்னவென்று சொல்வது? பணத்தில் ,உழைப்பில் ஜாதி இல்லையா?!

இங்கே என் நண்பர் சொன்ன ஒரு தகவலைச் சொன்னால் மிகச் சரியாக இருக்கும்.ஆம் இதோ அந்தத் தகவல் உங்களுக்கும்!

நடிகவேள் M R .ராதா அவர்களின் படத்தில் ஒரு காட்சி வரும். கீரை விற்பவரிடம் MR.ராதா மனைவி கீரையை வாங்கிக் கொண்டு நேராக வீட்டிற்குள் வந்து விடுவார்.அதைப் பார்க்கும் MR .ராதா , தண்ணி தெளித்து எடுத்துட்டுப் போடி தீட்டுப் பட்டுவிடும் என்று சொல்லுவார். அடுத்து சில நொடிகளில் யாரோ ஒருவர் வந்து அவர் மனைவியிடம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுப்பார்கள் .அதை எடுத்துக் கொண்டு போகும் பொழுது அவர் மனைவி அதில் தண்ணீர் தெளிப்பார்கள் , உடனே M R .ராதா சொல்லுவார் “என்னடி பண்ற ? பணத்துக்கு ஏன்டி தண்ணீர் தெளிக்கற ?அதுக்கு தீட்டு என்று எதுவும் இல்லை” என்று !

இதைக் கேட்டதும் “அட பாரதி சொன்ன வேடிக்கை மனிதர்களே(அனைவரையும் அல்ல)!! உங்களின் சதிதான் இந்த சாதியா?!” என்று நினைக்கத் தோன்றியது.

விகடனின்  “வலைபாயுதே”வில் படித்தது என நண்பர் ஒருவர் வாட்ஸ் அப்பில் நண்பர் ஒருவர் பகிர்ந்து கொண்ட கவிதையைச் சொல்லி இந்த பதிவை இங்கே நிறைவு செய்கிறேன்!

இங்கே சாதிகள்ஒழியவில்லை!
ஒளிந்திருக்கின்றன!!

இதில் உங்களுக்கும் மறுப்பு இருக்காது என்று நம்புகிறேன்!

மேலும் தொடர்கிறேன்! காத்திருக்கவும்!!
படங்கள்:கூகிள்

நன்றி: விகடன், தி தமிழ் ஹிந்து, சமஸ் ப்ளாக்,வாட்ஸ் அப்,கூகிள் இமேஜ்

முந்தைய பதிவிற்கு!

சதி-சாதி-சா”தீ”!?!!#1

சதி-சாதி-சா”தீ”

ஜாதி எப்படி வந்திருக்கும்:

ஜாதி இது இல்லாமல் இந்தியாவில் எதுவும் இல்லை என்ற நிலை! என்றோ , யாரோ ஒரு சிலரால் ஒரு சில நோக்கத்தால் உருவாக்கப் பட்டு , காலம் காலமாக வளர்த்தெடுக்கப் படுகிறது ! அனைவரும் தங்களை ஆண்டவர்கள் என்றே சொல்லிக் கொள்கிறார்கள்! ஜாதிய அடிப்படையிலான பிரச்சனைகள், கவுரவக் கொலைகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. எல்லோருக்கும் இருக்கும் சர்க்கரை நோய் போல ஜாதி என்பது ஒரு வித மன நோயாக இருக்க வேண்டும்!

ஜாதி என்றால் என்ன ?

இதோ விக்கிபிடியா தரும் விளக்கம்:

சாதி என்பது இந்தியப் பாணியிலான சமூகத்தின் அடிப்படைச் சமூக அலகு ஆகும். இதன் தனித்தன்மை பிறப்பின் அடிப்படையிலான வேலைப்பிரிவினையே. இது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நிலவுகிறது. ஒருவரின் சாதி அவரின் பிறப்பைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே இதனை வெளியேற வழியற்று அடைபட்ட வகுப்பு என்று கூறலாம். இது சமூக வழக்கு, அதிலிருந்து தோன்றிய அரசுகள் போன்றவற்றால் பாதுகாக்கப்டுகிறது.

கேள்விகள்:

ஒரு மனிதனின் அடிப்படை என்பது உண்ண உணவு , உடுத்த உடை, இருக்க இடம் மட்டுமே ஜாதி அல்ல!

வேலைப் பிரிவினைதான் ஜாதி உருவாக காரணம் என்றால் , இவ்வளவு காலமாக வேலைகள் புதிது புதிதாக முளைத்துள்ளன! ஜாதி மட்டும் ஏன் அடிப்படையில் அப்படியே உள்ளது?

ஜாதியை ஏன் பாதுகாக்க வேண்டும்?

இப்பொழுது கூட ஜாதி பார்க்கப் படுகிறதா?

இப்பொழுதெல்லாம் யாருங்க ஜாதி பார்க்கிறார்கள்? என்று பரவலாக பேசுபவர்கள் பலர் இருக்கிறார்கள்.ஆனால் இந்தியாவில் இருவர் சந்தித்துக் கொள்ளும் பொழுது தொடக்கத்திலோ அல்லது சந்திப்பு முடியும் பொழுதோ என்ன  ஜாதி என்ற கேள்வி கேட்கப் படாமல் இருப்பதில்லை. நீ என்ன ஜாதி என்று கேட்பதற்கு அவர்கள் தயங்குவதில்லை.ஒரு வகையில் அதுவும் ஒருவித போதை ! அது டாஸ்க்மாக் போதையை விட கொடியது.ஆம் டாஸ்மாக் போதையாவது குடுபத்தை அழிக்கும்.ஜாதிய போதையோ சமுதாயத்தை ஏன் இனத்தையே அழித்துவிடும்!

கல்வியும் , ஜாதியும்:

இன்றைய கல்வி என்பது அன்றைய கல்வியின் சிறு மாற்றம்தான். பல கல்விக் கூடங்களும் ,கல்வி கற்றுத் தருபவர்களில் சிலரும் இங்கே ஜாதிய அடையாளத்தோடு இருக்கும் பொழுது , கல்வி மட்டும் எப்படி சாதியப் பாகுபாட்டை மாற்றி விடப் போகிறது?

மேலும் தொடர்கிறேன்! காத்திருக்கவும்!!

நன்றி: விக்கிபீடியா மற்றும் கூகிள்