தென் இந்திய நடிகர் சங்கத் தேர்தலும் , ரஜினி பேச்சும்
தென் இந்திய நடிகர் சங்கத்திற்கு, தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்று பெயர் வைக்க வேண்டும் என்ற ரஜினிகாந்த் அவர்களின் வேண்டுகோளுக்கு ஆதரவும்,எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.
தமிழ் நாட்டைத் தலைமை இடமாகக் கொண்டு , தமிழ் மொழியில் படம் எடுக்கும் நடிகர்கள் சேர்ந்த ஒரு சங்கத்திற்கு தமிழ் நாடு நடிகர்கள் சங்கம் என்று பெயரிடுவதில் என்ன தவறு இருக்க முடியும்.
மற்ற மாநில நடிகர்கள் முதல் உலக நடிகர்கள் வரை:
இங்கே எல்லா மாநிலத்து நடிகர்களும் நடிக்கிறார்களே எப்படி தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என பெயரிடுவது? ஒரு தலைப்பட்சமானதே என பலர் நினைக்கலாம்!
இங்கே வட இந்திய நடிகர்கள் கூடத்தான் நடிக்கிறார்கள் அப்படி இருக்க எப்படித் தென் இந்திய நடிகர் சங்கம் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் ?
இப்பொழுது எல்லாம் வெளிநாட்டு நடிகர்களும் கூட இங்கே வந்து நடிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதற்காக வெளிநாட்டு பெயரையும் சேர்த்தா வைக்க முடியும் ? இல்லை இந்திய நடிகர் சங்கம் என்றுதான் வைக்க முடியுமா ?
யார் வேண்டுமானால் வரலாம் போகலாம். ஆனால் எங்கே அது துவங்குகிறது , யாரை நம்பி அது எடுக்கப் படுகிறது? யாருக்காக எடுக்கப் படுகிறது. யார் அதிகம் விரும்பி பார்க்கிறார்கள் ?
மற்ற மாநில , நாட்டு நடிகர்கள் நடிக்க கூடாதா ?
அப்படி யாரும் சொல்ல வில்லையே , சொல்லவும் மாட்டார்களே ?! மற்ற நடிகர்கள் நடிக்கத் தடை என்று எப்படி சொல்ல முடியும்.
உறுப்பினர்கள்:
தமிழர்கள் மட்டும்தான் உறுப்பினர் ஆக வேண்டும் என்று யாரும் சொல்ல வில்லையே! கலைஞர்கள் யாரும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராகினும் தமிழ்ப் படத்தில் நடிக்கும் அனைவரும் உறுப்பினர் ஆகலாமே!
மற்ற மாநில நடிகர்கள் சங்கத்தின் பெயர்கள்?
தெலுங்கு , மலையாளம் , இந்தி சங்கங்களுக்குத் தென் இந்திய நடிகர் சங்கம் என்றோ , இந்திய நடிகர் சங்கம் என்றோ பெயர் இருப்பதாய்த் தெரியவில்லை . அதனால் மற்றவர்கள் அங்கு போய் நடிக்காமல் இருக்கிறார்களா ? இல்லை அவர்கள்தான் இவர்களை கூப்பிடாமல் இருக்கிறார்களா?
கோடம்பாக்கம்/கோலிவுட்!
தமிழ் சினிமாவில் நடிக்க வருபவர்கள் முதலில் வர நினைக்கும் இடம் கோடம்பாக்கம்! தமிழ் சினிமாவை கோலிவுட்! என்றுதான் உலகம் அழைக்கிறது. அப்படி இருக்க பெயர் மாற்றம் ஒன்றும் தவறு இல்லை எனத் தோன்றுகிறது.
உலக அளவில் தமிழ் மொழி சினிமாவை எப்படி மொழி எடுத்துக் காட்டுகிறதோ. அதன் தலைமையாய்த் திகழும் தமிழ் நாட்டின் பெயரை வைப்பதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.