Posts Tagged ‘சுதந்திரம்’

இந்தியா என்ற பல மொழிகள், பல இனங்கள் கொண்ட நாடு இன்று 69 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நாம் அனைவரும் முழுமையான சுதந்திரத்தைப் பெற்று இருக்கின்றோமா?

இன்றைய சுதந்திர தின உரையில் கூட தமிழ்நாடு முதல்வர் “அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைப்பதும், ஏற்றத்தாழ்வு இல்லாததுமே உண்மயான சுதந்திரம்” என்று கூறி இருந்தார். உண்மைதானே ?! ஏற்றத் தாழ்வு இல்லாத ஒன்றுதானே சுதந்திரமாக இருக்க முடியும். ஆனால் அவ்வாறுதான் நம் நாடு இருக்கிறதா ?

ஒரு புறம் பிரமாண்ட வளர்ச்சி , மறுபுறம் ஏழ்மை! ஒருபுறம் பல மதங்கள் வாழும் மதச் சார்பற்ற நாடு, மறுபுறம் மத மோதல்கள்! அதோடு இல்லாமல் உலகில் எங்குமே இல்லாத “ஜாதி” என்ற பிரிவினை சில உயர் வகுப்பு ஜந்துக்களால் இந்த நாட்டில் மட்டும் தானே ஏற்ப்படுத்தப் பட்டு இருக்கிறது. அதன் விளைவுகள் இன்றும் கூட இந்த சுதந்திர நாட்டில் எந்த அளவுக்கு இருக்கிறது என்று நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

ஒரு சமூகம் முன்னேறாமல் ஒரு நாடு முன்னேறி விட முடியாது. ஒருவகையில் நாம் இன்னும் வளரும் நாடாகவே இருக்க சமூக விடுதலை அடையாதது கூட ஒரு காரணமாக இருக்கலாம் . இந்த நாட்டிற்க்கு சட்டம் அமைத்த அம்பேத்கர் கூட இட ஒதுக்கீட்டை அமல் படுத்தும் நேரத்தில் , இது பிறரால் நிந்திக்கப் பட்ட குறிப்பிட்ட சில மக்கள் மேல் நிலை அடையும் வரை மட்டுமே இது நடைமுறையில் இருக்க வேண்டும் , பிறகு இது மறுபரிசீலனைக்கு உரியது” என்று சொல்லி இருந்தார்!

உண்மையில் அந்த மக்கள் மேல் நிலை அடைந்தனரா? மேல் நிலை அடைய விடப் பட்டனரா? சலுகை பெறுகிறார்கள் என்று முத்திரை குத்தப் பட்டார்களே அன்றி அவர்கள் தங்களால்தான் அப்படி ஆக்கப் பட்டனர் என்று வெளிப் படையாக சொல்ல முடிகிறதா ? இல்லையே !!

“நமது ஜனநாயக அமைப்புகளுக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று குறுப்பிட்டுள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி,அதுபற்றி மக்களும் அரசியல் கட்சிகளும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றும், தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டிய கடமையும் ஏற்பட்டுள்ளது என்று நாடாளுமன்றம் முடக்கத்தைப் பற்றி கூறி இருந்தார். இது ஜாதிய ஏற்றத் தாழ்விற்கும் பொருந்தும்.

சமூகம் என்ற அமைப்பே “எல்லோரையும் ஒருங்கிணைத்து வாழ்வதுதானே” ஒரு பெரிய நாட்டிலே , ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் எல்லா நலன்களும் , வளங்களும் பெற்று வாழ்வது எப்படி முழுமையான சுதந்திரமாக இருக்க முடியும். அந்த வகையில் அவர்களை அப்படி வாழ விடாமல் செய்தவர்களை நாம் என்ன என்று சொல்வது , எப்படி அழைப்பது , எந்த வழியில் வகைப் படுத்துவது ?! அப்படியானால் நமக்கு காந்தி சொன்னது போல “இன்னொரு சுதந்திரப் போராட்டம் வேண்டுமோ ?!”

இல்லை இன்னும் சட்டங்கள் இங்கே கடுமையாக்கப் பட வேண்டுமா ? ஆனால்

“நமது அரசியல் சாசனத்தின் செயல்பாடு என்பது அரசியல் சாசன ஷரத்துக்களை மட்டுமே சார்ந்தது அல்ல, அரசின் அங்கமான நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றைத்தான் அரசியல் சாசனம் வழங்க முடியும். மக்களும் அவர்கள் உருவாக்கும் அரசியல் கட்சிகள் பின்பற்றும் அரசியலை பொறுத்தே அரசின் இந்த உறுப்பு அமைப்புகள் இயங்கும். இந்திய மக்களும் அவர்களின் கட்சிகளும் எதிர்காலத்தில் எந்த அணுகுமுறையை மேற்கொள்வார்கள் என்பதை எப்படி கணிக்க முடியும்” என்று டாக்டர் அம்பேத்கர் கூறியிருந்தார்.

ஆக சட்டம் மட்டுமே இதனைப் பெற்றுத் தந்துவிட முடியாது என்பது நமக்கு தெளிவாகிறது! அப்படியானால் வேறு எப்படித்தான் இதனைப் பெறுவது ?

இந்திய வளர்ச்சிக்கு காரணம் கூட்டு முயற்சியே என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதமாகச் சொல்லி இருந்தார். அந்த கூட்டு முயற்சி என்பது வெறும் ஏழை -பணக்காரன் , மொழி -இனம் ,மதம் என்று இருந்து விடாது , சிலரால் உருவாக்கப் பட்ட ஜாதிய முறைகளும் , அந்த ஜாதியத்தால் உயர்ந்த -பாதிக்கப் பட்ட மக்களையும் உள்ளடக்கியதாகவே இருக்க வேண்டும் . அப்படி இல்லாமல் போனால் அது கூட்டு முயற்சியாக இருக்க முடியாது!

இன்றும் கூட சமுதாயத்தின் ஒற்றுமையை சீர் குலைத்து விடுபவர்கள் (குற்றவாளிகள்) மத்ததின் பெயரால் , ஜாதியின் பெயரால் , பணத்தின் உதவியால் தப்பித்து விடுகிறார்கள் .இத்தகைய செயல்பாடுகள் “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்பதனையே கேள்விக்கு உள்ளாக்கி விட்டது.

தி ஹிந்து தமிழ் நாளிதழின் தலையங்கத்தில் இருந்து “சாதியை ஒழிப்போம், மதவாதத்தை மாய்ப்போம் என்று கூறிவிட்டுச் சாதி உணர்வை விசிறிவிட்டு மதப்பூசல்களைக் கூர்மைப்படுத்திக்கொண்டிருக்கிறோம்”

இந்தக் கூற்று இதனை உறுதிப் படுத்துவதைப் போல உள்ளது. ஆக இதில் நம் எல்லாச் சமூகத்திற்கும் பங்கு உள்ளதோ என்ற ஐயப்பாடு உள்ளது .

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அது

“சமூக விடுதலையே, உண்மையான விடுதலை” என்ற பெரியாரின் வாக்கு!!

எவ்வளவு ஆழமானது!உண்மையானது!!

ஆம் நாம் இன்று கடந்து வந்த தொலைவை விட , இன்னும் கடக்க வேண்டிய தொலைவு வெகு தூரத்தில் உள்ளது. அதனை அடைய பல சவால்களை கடந்து செல்ல வேண்டி உள்ளது.அதுவரை இந்த சுதந்திரம் என்பது நமக்கு ஒரு கருவியாகத்தான் இருக்குமே தவிர கொண்டாட்டத்தின் எல்லையாக இருக்காது.

படங்கள்: கூகிள்

நன்றி: தி ஹிந்து தமிழ் , தினமணி