Posts Tagged ‘இலங்கைத் தேர்தல்’

இலங்கைப் பாராளுமன்றம் கலைப்பு  மற்றும்  அடுத்த தேர்தல்:

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப் பட்டது , வரும் ஆகத்து 17ல் அங்கே பொதுத் தேர்தல் நடக்க உள்ளது என்ற செய்தி கடந்த வாரம் வெளியாகி உலகத் தமிழர்கள் மட்டுமின்றி , உள்ளூர் நடுநிலை சிங்களவர்கள் மத்தியிலும் ஒரு மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்ப்படுத்தியது.

எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்:

ஆனால் நேற்று வெளியான அந்த செய்தி எல்லோர் மனதிலும் ஒருவித சந்தேகத்தையும் , கவலையையும் வெளிப்படுத்தி இருக்கிறது.  ஆம் , நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அனுமதி என்பதுதான் அந்தச் செய்தி.

நிழலும் , நிஜமும்:

போர் முடிந்து ஓரளவிற்கு அமைதி திரும்பியது என்ற நிலை கொஞ்ச காலம் வரை நீடிக்காது போலத் தெரிகிறது இந்த விடயத்தால்! கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோற்ற மகிந்த ராஜபக்சே  “தமிழ் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம்களால் நான் தோற்கடிக்கப் பட்டேன் , சிங்களவர்கள் மத்தியில் இன்னமும் என் செயல்களின் மேல் நம்பிக்கை உள்ளது” என்று சொன்னவர்(ஆனால் முதல் முறை தமிழர்களின் வாக்குகளால்தான் மகிந்தா ஜனாதிபதியானார் என்பதும்,அதற்க்கு அவர் செய்த கைம்மாறு(கருமாதி)என்ன என்பதும் உலகறிந்த வரலாறு.) . அது இரு முறை ஜனாதிபதியாக இருந்தவர் மக்களின் தேர்தல் முடிவைக் கூட பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்ளாத ஒரு அற்ப அரசியல்வாதி அவர் என்பதை உணர்த்தியது .
கூட்டாளிகளோ?:

மகிந்த ராஜபக்சே போட்டியிட மைத்ரி சிறிசேனாவும் ஆதரவு என்ற செய்திதான் , அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. ஒருவேளை எல்லோரும் கூட்டாளிகளோ என்பது போல நினைக்க வைத்தது இந்த விடயம்! கடந்த தேர்தலில் மகிந்தா தோற்ற பிறகும் பதவி விலக மறுத்தார் அந்த சமயம் ரணில் அவரை சமாதானம் செய்தார் என்ற செய்தியும் ,சமீபத்தில் சிறிசேனாவை மகிந்தா சந்தித்துப் பேசினார் என்றும் படித்தோம் , இதெல்லாம் நமக்கு உள்ள  சந்தேகத்தை மேலும் அதிகமாக்குகிறது.தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள் “நான் உன்னை அடிப்பதைப் போல அடிக்கிறேன் , நீ அழுவதைப் போல அழு என்று” அதைப் போல உள்ளது இந்தக் கூட்டணி! இதுவரை இதில் சந்திரிக்காவின் முடிவு என்ன என்பதே தெரியவில்லை , அவருக்கு அங்கே செல்வாக்கு குறைந்து விட்டதா என்றும் நினைக்கத் தோன்றுகிறது.


இனி இருக்குமா அமைதி ?:

சிறிசேனா நிச்சயம் ஒரு சூப்பர் ஹீரோ இல்லை ஆனால் இப்போதைய சூழலில்  மகிந்த ராஜபக்சேவிற்கு ஒரு ஆறுதல் மாற்று என்பதை அவரது நிகழ்கால செயல்களில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்! யுத்தம் முடிந்த இந்த 6 ஆண்டுகளில் சொல்லிக் கொள்ளும் மாற்றம் ஏதும் நிகழாத இந்த வேளையில் மகிந்தாவின் வருகை அனைத்து சமாதன முயற்சிகளையும் முடக்கிவிட வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.

எதிர்காலம்?!:

ஒருவேளை சிறிசேனா  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற கட்சியைப் பாதுகாக்க இந்த விசியத்திற்கு சம்மதம் தெரிவித்து இருக்கலாம் , ஆனால் இது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற கட்சியைத் தாண்டி , இலங்கையில் நடந்த கடந்த கால தவறுகளுக்கு தீர்வு சொல்லும் வாய்ப்பாக “மகிந்தாவின் மறு அரசியல் பிரவேசம் அமையாது “என்பது உண்மை. இந்த வேளையில் யுத்தம் முடிந்து சர்வதேச மற்றும் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற உள்ள கடைசி வாய்ப்பையும் இலங்கை வீணடித்து விடக் கூடாது என்பது அரசியல் நோக்கர்களின் எண்ணம்.


நம்பிக்கை:

அரசன் அன்று கொன்றாலும் , தெய்வம் நின்று கொன்றாலும்! மாற்றம் முடிவு தரும் , அதுவரை நம்பிக்கை கொண்டிருப்போம்!!

படங்கள் உதவி & நன்றி : கூகுள்