Archive for the ‘360தலையங்கம்’ Category

நண்பர்களே இதுவரை pradheep360.wordpress.com படித்து வந்த நீங்கள் இனி www.Viyanpradheep.com  என்ற வெப்சைட்டில் தொடர்ந்து படிக்கலாம்.
தொந்தரவுக்கு மன்னிக்கவும்!!
தங்கள் ஆதரவிற்கு நன்றி.
வியன் பிரதீப்

ஒரு வகையில் கருப்பாடுகள் காப்பாற்றப் படுகிறார்களோ?

சில மாதங்களுக்கு முன்பு அரசு ஒரு அறிக்கை விடுகிறது.தாமாக முன் வந்து கருப்புப் பணத்தின் கணக்கைக் காட்டினால் அதற்கு உண்டான வரியைக் கட்டிவிட்டு  அவர்களே அனுபவிக்கலாம் என்றது.
சிலர் கணக்கைக் காட்டி இருக்கிறார்கள். அவர்களின் தகவல்கள் பாதுகாக்கப் படுகிறது(அரசுக்கு யாரையும் தண்டிக்க எண்ணமில்லை போலும்).
பலர் இன்னும் கணக்கைக் காட்டவில்லை போலும்! ஒரு வேளை இது அரசின் தோல்வியாகக் கூட இருக்கலாம்!
அதனால்தான் அரசு இந்த முடிவுக்கு வந்திருக்கக் கூடும்.
இதனால் கருப்புப் பணம் கொஞ்சம் ஒழியலாம், கொஞ்சம் கணக்குக் காட்டப் படலாம். தற்காலிகமானதாகவே அது அமையும்! 
அரசுக்கு இந்த அளவு சாதனை (தேர்தலுக்குப்) போதுமானதாக இருக்கலாம்.
ஆனால் நேற்றுவரை 1000 ரூபாய் நோட்டுக்களைப் பதுக்கியவன் இனி 4000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்படும் வரை 2000 ரூபாய் நோட்டுக்களைப் பதுக்குவான்!

கடைசிவரை அந்தக்  கருப்பாடுகள் பிடிபடப்போவதில்லை!

காவிரியில் நமக்கு உரிமை இருக்கிறது, சரி… உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா? என்ற தங்கள் கட்டுரை தி ஹிந்து தமிழ் நாளிதழில் படித்தேன்.

எங்கெல்லாம் உரிமை இருக்கிறதோ? அங்கெல்லாம் உரிமைகளைப் பற்றிப் பேசும் தகுதியும், தேவைப்பட்டால் போராட வேண்டிய துணிவும் சேர்ந்தே இருக்கும்!

வாய்க்கால்களை தூர்வாருதல்,மணல் கொள்ளை பற்றி //வழிநெடுகிலும் புதர் மண்டிக் கிடந்தது. இடையிடையே மணல் கொள்ளையர்களின் சூறையாடலைச் சொல்லும் பெரும் பள்ளங்கள். காய்ந்து கிடந்த ஆற்றில் தண்ணீர் தென்பட்ட இடங்கள் அத்தனையும் கழிவுகள் கலக்கும் முகவாய்கள். ஆலைக் கழிவுகள், ரசாயனக் கழிவுகள், ஊர்க் கழிவுகள். இவை அத்தனையோடும் புது வெள்ளம் ஒன்றிக் கலக்கிறது. ஆற்றுக்கு ஏற்பட்டிருக்கும் மோசமான சேதத்தை மூடி நிறைக்கிறது-சமஸ் கட்டுரையில் இருந்து// சொல்லி தமிழக அரசையும் சேர்த்தே குற்றம் சாட்டிய நீங்கள்,எந்த இடத்திலும் மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசு இந்திய கூட்டாச்சியின் அங்கமாக விளங்கும் நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவதில் காட்டும் மெத்தனத்தையும்,சட்ட அவ மதிப்புகளையும் சொல்ல உங்களுக்கு பக்கம் போதவில்லையா இல்லை மூடி மறைத்து விட்டீர்களா?

அசாமின் நீர் மேலாண்மையைப் பற்றி சொன்ன நீங்கள்,இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கிடையே எப்படி நீர் பகிரப்படுகிறது என்பதையும் சேர்த்தே சொல்லி இருக்கலாமே?

கல்லணை பற்றி சொல்லிவிட்டு, அது எப்படிச் செயல்படுகிறது என்பதை சொல்லாமல் விட்டது மறந்து போனதாலா இல்லை,இந்த தலைமுறையிடம் இருந்து மறைத்து விட்டீர்களா என்ற சந்தேகத்தை ஆச்சர்யத்தோடு எழுப்புகிறது உங்கள் கட்டுரை.

ஒருவேளை தமிழ் நாடு மேலிருந்து கர்நாடகத்திற்கு நீர் வழங்காது போனால் தமிழர்கள் கர்நாடகாவிற்காக தமிழ்நாட்டில் போராடி இருப்பார்கள்!

நீர் மேலாண்மை என்பது ஒட்டு மொத்த உலகத்திற்கே பிரச்சனையாக இருக்கும் பொழுது நீங்கள் தமிழ்நாட்டை மற்றும் குறை சொல்லி சமரசம் செய்ய வேண்டிய மத்திய அரசைப் பற்றி ஒன்றுமே சொல்லாதது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இருக்கிறது.

கர்நாடகம் இன்றைக்குக் கிட்டத்தட்ட பதினைந்து மடங்கு சாகுபடிப் பரப்பை அதிகரித்திருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு அவர்கள் காலத்தே பின்தங்கி இப்பொழுதுதான் முன்னேறுகிறார்கள் என்று சொல்வது முரணாகவும்,நாம் அதை தடுக்கிறோம் என்று சொல்வது அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

//காலத்தே யார் முன்னேறியவர்களோ அவர்களுக்கான முன்னுரிமை என்றும் தொடர வேண்டும் என்ற நியாயத்தைத் தமிழகம் போன்ற ஒரு சமூகநீதி மாநிலம் இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பேச முடியும்?// என்ற இதே கேள்வியை இந்தியாவில் வியாபித்துள்ள அதிகாரம் மற்றும் ஜாதிய கட்டமைப்புகளில் உங்களால் எழுப்ப முடியுமா?

மூன்றாம் உலகப்போர் ஒன்று நிகழுமானால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற வைரமுத்து அவர்களின் மேற்கொள்படி, காவிரி போன்ற ஒரு முக்கியமான வாழ்வாதாரப் பிரச்சனைகளில் தமிழ்நாட்டின் நீர் மேலாண்மைக்கு குரல் கொடுக்கும் நீங்கள் அதன் மீதான நம் உரிமைகளுக்கு சற்றே உரத்து குரல் கொடுங்களேன்.அதே வேளையில் காவிரி மீதான தமிழக வரலாற்றை உங்கள் எழுதுகோளால் அழித்து விடாதீர்கள்,ஒரு வகையில் அதுவும் ஓர் இன அழிப்பே!

நன்றி!

இப்படிக்கு,

காவிரியில் எங்களுக்குமான உரிமை பற்றி பேச தகுதியுள்ள தமிழர்களில் ஒருவன்!

சமஸ் கட்டுரை

காவிரியில் நமக்கு உரிமை இருக்கிறது, சரி… உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா?

Thanks: The Hindu Tamil

 

#குடிநீருக்கு தண்ணீர் வேண்டும் என்ற எந்த #மக்களும், #விவசாயத்திற்கு தண்ணீர் வேண்டும் என்ற எந்த விவசாயிகளும் #பஸ்ஸையோ, #லாரியையோ கொளுத்த மாட்டார்கள்.

பிறரின் உடைமைகளை அடித்துச் சேதப் படுத்த மாட்டார்கள். எந்த மக்களையும் அடிக்க மாட்டார்கள்!

ஆக இது சாதாரண மக்களாலோ , விவசாயிகளாலோ நடப்பதல்ல என்பது மட்டும் உண்மை. இதை தமிழக மக்கள் உணர்ந்து இருப்பார்கள்.

உணர்ச்சிவசப் படுவதைக் காட்டிலும் நாம் செய்ய வேண்டியது நிறைய உள்ளது!

#Cauvery_issue #EnsureSafety #NeedActionOnViolence

சென்னையில் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை!

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும் :10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

இந்தச் செய்தியைக்  கேட்ட பிறகு வெறுமனே கடந்து போக முடியவில்லை. நம்மில் பலரும் இந்தச் செய்தியைப் படித்து இருப்பார்களா என்று கூடத் தெரியவில்லை. பத்திரிக்கைகளும் , தொலைக்காட்சியும் இந்தச் செய்திக்கு  எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பார்கள் என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியது இல்லை.

தன் சக மாணவ மாணவிகள் தன்னை கிண்டல் செய்தார்கள் என்பதற்காக தன் உயிரை மாய்த்துக் கொண்டு விட்டது இந்தக் குழந்தை! ஒரு முறை அல்ல இரு முறை அல்ல பல முறை அவர்கள் கிண்டல் செய்து இருப்பார்கள் போல (செய்தி: தி ஹிந்து தமிழ் நாளேடு). அதனை குழந்தையின் அம்மா சம்பந்தப் பட்ட கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியப் படுத்தியும் எந்த வித நடவடிக்கையும் அவர்கள் எடுக்க வில்லை.

பணமே பிரதானமாக கொண்டு இயங்கும் பல பள்ளிகளில் (எல்லாப் பள்ளிகளைப் பற்றியும் சொல்ல வில்லை) , பிள்ளைகளின் உணர்வுகளை எந்த அளவிற்கு மதிப்பார்கள் என்று தெரியவில்லை. LKG ,UKG போகும் குழந்தைகளிடமே நாளை உங்க அப்பாட்ட சொல்லி ஸ்கூல் பீஸ் வாங்கிட்டு வா என்று சொல்லி அனுப்புகிற கல்விக் கூடங்களும், அதனை நடத்தும் கல்வித் தந்தைகளும் இருக்கும் சமூகம் நம்முடையது .

சம்பந்தப் பட்ட மாணவர்களும் தங்களைத் திருத்திக் கொள்ள வில்லை. இறந்த குழந்தையும் தன்னை இந்த விசியத்தில் விடுவித்துக் கொள்ள முடியவில்லை.

பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வரும் பொழுதும் , தேர்ச்சி பெறாதவர்கள் சிலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் .இது ஒவ்வொரு வருடமும் நடக்கிறது. நாமும் படித்து விட்டு மறந்து விடுகிறோம், கடந்து விடுகிறோம்.

உளவியல் ரீதியாகப் பார்த்தால், எல்லாக் குழந்தைகளும் எல்லாச் சூழ்நிலைகளையும் சமாளித்து விடுவார்கள் என்று நினைத்து விட முடியாது. 15 வயது என்பது குழந்தைப் பருவம் என்றுதான் இந்தியாவில் சொல்கிறோம்.

இந்தியா இளைஞர்களைக் கொண்ட நாடு என்று நாம் பெருமை பட்டுக் கொண்டாலும், அந்த இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டாமா? அவர்கள் பிரச்னை என்ன , அதற்குத் தீர்வு என்ன என்று கண்டு அதைக் களைய வேண்டாமா ? அவர்களை முறைப் படுத்த வேண்டாமா?அப்படிச் செய்யாவிடில் இளைஞர்கள் இருந்து என்ன பயன் ? இந்த தேசம் இளைமையாய் இருந்து என்னதான் பயன்?

நார்வே , அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் குழந்தைகளை இப்படித்தான் வளர்க்க வேண்டும் , இந்த வயதிற்கு இந்த மாறிதான் அவர்கள் நடந்து கொள்வார்கள். அவர்களுக்கு பிடித்தது , பிடிக்காதது மற்றும் உளவியல் காரணங்களை ஆராய்ந்தே அதற்க்கு ஏற்றார்ப் போல வளர்க்கப் படுகிறார்கள்.

இங்கே நம் நாட்டில் கட்டுப் பாடு இல்லை, நன்மைதான். ஆனால் உளவியல் ரீதியாக அவர்களை நாம் நெருங்கி விட வில்லை. நமக்கும் வயது என்ற இடைவெளி கூட விழுந்து விடுகிறது. இங்கே ஒரு குழந்தை குழந்தைப் பருவத்தில் அது குழந்தையாக இருப்பதில்லை (வளர்ப்பதில்லை), கல்லூரிப் பருவத்தில் அந்தப் பருவத்திற்கு ஏற்றார்ப் போல வளர்க்கப் படுவதில்லை அல்லது பார்க்கப் படுவதில்லை.

முன்பு போல கூட்டுக் குடும்பங்களும் நம் சமூகத்தில் இல்லை. பிறந்தது முதல் கல்லூரி முடிக்கும் வரையில் பணம், மதம் , ஜாதி, விருப்பு , வெறுப்பு, சக மாணவர்கள் செய்யும் பிரச்னை , பாலியல் தொந்தரவு ,குடும்ப பிரச்னை என்று எவ்வளவு கட்டங்களைத் தாண்டி வர வேண்டிஉள்ளது ? அதுவும் பெண் குழந்தையாக இருந்து விட்டால் அது படும் துன்பங்கள்தான் எத்தனை எத்தனை?

முன்பெல்லாம் பள்ளிகளில் நீதி போதனை என்று ஒரு வகுப்பு இருக்கும், அது இப்பொழுது வெறும் பெயரளவில்தான் உள்ளது. அதோடு சேர்த்து ஓவியம், விளையாட்டு  என பல வகுப்புகள் படிப்பிற்கே சென்று விடுகிறது. அப்படி படித்து படித்து நாம் இன்னொரு இடத்திற்குத்தான் வேலைக்கு போகப் போகிறோம்! வேற என்ன பெரிதாக சாதித்து விடப் போகிறோம்? இன்னும் வெளிப் படையாகச் சொல்வதென்றால், நம் சுயம் இழந்து வெளி நாட்டிற்க்கு வேலைக்குப் போவோம்.

அரசுப் பள்ளிகளில் கழிப்பறை இல்லை, எல்லாப் பள்ளிகளிலும் பிள்ளைகளின் மன உளைச்சலைப் போக்க மனநல ஆலோசகர்கள் இல்லை  என்பது நாம் உண்மையில் வெட்கப் பட வேண்டிய ஒன்று.பள்ளி, கல்லூரிகளில் மனநல ஆலோசகர்கள் வேண்டும்! இது பற்றிய விழிப் புணர்வுகளும் ,தேவைப் பட்டால் போராட்டங்களும் தேவை.

சமூக வலைதளங்களும் பெருகி எல்லாமே தனித் தீவாகிப் போன இந்த யுகத்தில், நம் குழந்தைகளுக்கு என்று நாம் செய்ய வேண்டியத் தேவைகள் சில உள்ளது. காலத்திற்கு ஏற்றார் போல எல்லாமே மாறும் பொழுது பள்ளிகளும் , கல்லூரிகளும் மாற வேண்டும், பாடத் திட்டங்களும் மாற வேண்டும்.

மீண்டும் இது போன்று நடவாமல் பார்த்துக் கொள்ள நாம் என்ன செய்யப் போகிறோம்? நமது அரசு என்ன செய்யப் போகிறது?!

படங்கள்: கூகுள்
செய்தியில் உதவி, நன்றி: தி ஹிந்து தமிழ் நாளிதழ்

இலங்கை என்றதும் பௌத்தம் நினைவிற்கு வருகிறதோ இல்லையோ , தமிழர்கள் அவர்களின் நிலைமை நினைவிற்கு வந்து விடுகிறது. அதுவும் போருக்குப் பிந்தைய இலங்கையில் தமிழர்களின் நிலைமை என்ன என்பது மில்லியன் டாலர் கேள்வி. பதில்தான் கிடைத்த பாடில்லை!

ஆகத்துப் 17 இல் பாராளுமன்றத் தேர்தலை நடத்தி சர்வதேசத்தில் தன்னை ஜனநாயக நாடாக (ஓரின ஜனநாயகம்) நிலை நிறுத்திக் கொண்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் யாருக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு இல்லை. இருந்தாலும் ராஜபக்சேவை இந்தத் தேர்தல் ஓரம் கட்டி உள்ளது, கொஞ்சம் ஆறுதல்.ஆறுதல் தமிழர்களுக்கு மட்டும் அல்ல , சிறிசேனா,ரணில் மற்றும் சந்திரிகாவிற்கும்தான் என்பது சிங்களமே அறிந்த உண்மை.

இந்தத் தேர்தல் ஜனநாயகத்திற்கோ , உலகிற்கோ, தமிழர்களுக்கோ கிடைத்த வெற்றி இல்லை. ராஜபக்சேவைப் பிடிக்காத சிங்கள அரசியல் தலைவர்களுக்கு கிடைத்த வெற்றி. விடுதலைப் புலிகளை அழித்ததை வைத்தே தன்னை நீண்ட காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ள ராஜபக்சே நினைத்து இருந்ததை மக்கள் தகர்த்தெறிந்துள்ளனர். ஆனால் இந்தத் தோல்வி ஒன்றும் படு தோல்வி இல்லை அவருக்கு. இந்தத் தேர்தலில் அவரும் வெற்றி பெற்றுள்ளார் . அவர் சார்ந்த கட்சியும் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது என்பதை நாம் மறுப்பதற்கு இல்லை.

ராஜபக்ச| கோப்புப் படம்: ஏ.பி.
விடுதலைப் புலிகள் சிங்கள கட்சிகளுக்கு பெரிய பிரச்னையாக இருந்தது உண்மை. அவர்களை ஒழித்ததை சிங்கள மக்கள் எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விட இந்தத் தேர்தலில் அதனை விடவும் பல காரணங்கள் அந்த மக்களுக்கு இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. சரி நாம் வேலை அதனை ஆராய்ச்சி செய்வதன்று. அதை அப்படியே சிங்கள மக்களிடம் விட்டு விடலாம்.

நாம் பேச வருவது இதுதான் , 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில், 196 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 29 உறுப்பினர்கள் அவரவர் கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளின் வீதப்படி கட்சித் தலைமையால் நியமிக்கப்படுகின்றனர். இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 106 இடங்கள் கிடைத்துள்ளன.  தமிழ் தேசியக் கூட்டணிக்கு 16 இடங்கள் கிடைத்துள்ளன. இடதுசாரி சிங்களக் கட்சியான ஜனதா விமுக்த பெரமுன 6 தொகுதி கிடைத்து உள்ளது.

ரணில் ஆட்சி அமைக்க இன்னும் 6 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப் படுகிறது .தமிழர்கள், முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மைச் சமூகத்தவர்களின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியமைக்க முடியும். அல்லது ஜனதா விமுக்த பெரமுனாவின் 6 இடங்கள் கொண்டு அவர்கள் ஆட்சி அமைக்க முடியும்.

ஆனால் சற்றும் எதிர்பார்க்காத வகையில் சிறிசேனா கட்சி ரணிலுடன் கை கோர்த்து உள்ளது. ஆம் ரணில் கட்சியும் , சிறிசேனா கட்சியும் 2 ஆண்டுகளுக்கு கூட்டாச்சி செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளன. தமிழர்கள் இல்லாமல் ஆட்சி செய்வது கூட்டாச்சி என்று எப்படி சொல்ல முடியும் , அது கூட்டாளிகளின் ஆட்சி என்று சொல்வதுதான் சரியாக இருக்க முடியும்.

போர்க் குற்ற விசாரணை , சர்வதேச நாடுகளின் கண்காணிப்பு, பண்டைய சீன ஆதரவு நிலை போன்றவற்றில் இருந்து தன்னை காப்பற்றிக் கொள்ளவும் , இன்றைய அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டை உரத்துச் சொல்லவும்தான் இலங்கை இந்தத் தேர்தலைப் பயன்பத்தி உள்ளது என்பது சர்வதேச அரசியல் விமர்சனர்களின் கருத்தாக உள்ளது.

சிறுபான்மையினரை மதிக்காத ஒரு பெரும்பான்மை நாட்டிலே ,தமிழர்களின் மீள் குடியேற்றம்,காணமல் போன தமிழர்களை கண்டுபிடிப்பது ,அரசியல் விடுதலை, தனி நாடு கோரிக்கை, சிங்கள -தமிழ் அரசியல் பகிர்வு,போருக்குப் பின் இலங்கை பொருளாதாரம், சிங்கள பேரினவாதம்,முஸ்லிம்-சிங்கள பிரச்சனை,ராஜபக்சே,சர்வதேச விசாரணை ,உள்நாட்டு விசாரணை ,கூட்டாச்சி என சிறிசேனாவிற்கும் , ரணிலுக்கும் மிகப் பெரிய சவால் இப்பொழுது காத்து இருக்கிறது. சிறிசேனவும் , ரணிலும் அதே பெரும்பான்மை சமூகத்தினர் என்பதும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். உள்நாட்டுப் போரில் பாதிக்கப் பட்டது தமிழர்களை விட யாரும் பாதிக்கப் பட்டு இருந்திருக்க மாட்டார்கள். அந்தப் போரின் முடிவுகளில் இருந்துபாடம் படிக்க வேண்டியது தமிழர்கள் மட்டும் இல்லை பெரும்பான்மை சிங்களவர்களும்தான்.

இடது ரணில் விக்கிரமசிங்கே, வலது சிறிசேனா
சிறிசேன மற்றும் ரணில் அவர்கள் புதிய நாட்டையும் , அரசியலையும் கட்டி எழுப்புவோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.ஆனால் சிங்களவர்களை முழுவதுமாக நம்பி விட முடியாது .கடந்த கால வரலாறே அதற்க்குச் சாட்சி.இருந்தும்  தமிழர்களுக்கு இந்தத் தேர்தல் முடிவுகளும் , இந்த ஆட்சியும்  எந்த அளவிற்கு  நன்மை தரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.காலமே அதற்க்கு பதில் சொல்லும்.

படங்கள்: தி ஹிந்து தமிழ் , நன்றி!

இந்தியா என்ற பல மொழிகள், பல இனங்கள் கொண்ட நாடு இன்று 69 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நாம் அனைவரும் முழுமையான சுதந்திரத்தைப் பெற்று இருக்கின்றோமா?

இன்றைய சுதந்திர தின உரையில் கூட தமிழ்நாடு முதல்வர் “அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைப்பதும், ஏற்றத்தாழ்வு இல்லாததுமே உண்மயான சுதந்திரம்” என்று கூறி இருந்தார். உண்மைதானே ?! ஏற்றத் தாழ்வு இல்லாத ஒன்றுதானே சுதந்திரமாக இருக்க முடியும். ஆனால் அவ்வாறுதான் நம் நாடு இருக்கிறதா ?

ஒரு புறம் பிரமாண்ட வளர்ச்சி , மறுபுறம் ஏழ்மை! ஒருபுறம் பல மதங்கள் வாழும் மதச் சார்பற்ற நாடு, மறுபுறம் மத மோதல்கள்! அதோடு இல்லாமல் உலகில் எங்குமே இல்லாத “ஜாதி” என்ற பிரிவினை சில உயர் வகுப்பு ஜந்துக்களால் இந்த நாட்டில் மட்டும் தானே ஏற்ப்படுத்தப் பட்டு இருக்கிறது. அதன் விளைவுகள் இன்றும் கூட இந்த சுதந்திர நாட்டில் எந்த அளவுக்கு இருக்கிறது என்று நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

ஒரு சமூகம் முன்னேறாமல் ஒரு நாடு முன்னேறி விட முடியாது. ஒருவகையில் நாம் இன்னும் வளரும் நாடாகவே இருக்க சமூக விடுதலை அடையாதது கூட ஒரு காரணமாக இருக்கலாம் . இந்த நாட்டிற்க்கு சட்டம் அமைத்த அம்பேத்கர் கூட இட ஒதுக்கீட்டை அமல் படுத்தும் நேரத்தில் , இது பிறரால் நிந்திக்கப் பட்ட குறிப்பிட்ட சில மக்கள் மேல் நிலை அடையும் வரை மட்டுமே இது நடைமுறையில் இருக்க வேண்டும் , பிறகு இது மறுபரிசீலனைக்கு உரியது” என்று சொல்லி இருந்தார்!

உண்மையில் அந்த மக்கள் மேல் நிலை அடைந்தனரா? மேல் நிலை அடைய விடப் பட்டனரா? சலுகை பெறுகிறார்கள் என்று முத்திரை குத்தப் பட்டார்களே அன்றி அவர்கள் தங்களால்தான் அப்படி ஆக்கப் பட்டனர் என்று வெளிப் படையாக சொல்ல முடிகிறதா ? இல்லையே !!

“நமது ஜனநாயக அமைப்புகளுக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று குறுப்பிட்டுள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி,அதுபற்றி மக்களும் அரசியல் கட்சிகளும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றும், தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டிய கடமையும் ஏற்பட்டுள்ளது என்று நாடாளுமன்றம் முடக்கத்தைப் பற்றி கூறி இருந்தார். இது ஜாதிய ஏற்றத் தாழ்விற்கும் பொருந்தும்.

சமூகம் என்ற அமைப்பே “எல்லோரையும் ஒருங்கிணைத்து வாழ்வதுதானே” ஒரு பெரிய நாட்டிலே , ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் எல்லா நலன்களும் , வளங்களும் பெற்று வாழ்வது எப்படி முழுமையான சுதந்திரமாக இருக்க முடியும். அந்த வகையில் அவர்களை அப்படி வாழ விடாமல் செய்தவர்களை நாம் என்ன என்று சொல்வது , எப்படி அழைப்பது , எந்த வழியில் வகைப் படுத்துவது ?! அப்படியானால் நமக்கு காந்தி சொன்னது போல “இன்னொரு சுதந்திரப் போராட்டம் வேண்டுமோ ?!”

இல்லை இன்னும் சட்டங்கள் இங்கே கடுமையாக்கப் பட வேண்டுமா ? ஆனால்

“நமது அரசியல் சாசனத்தின் செயல்பாடு என்பது அரசியல் சாசன ஷரத்துக்களை மட்டுமே சார்ந்தது அல்ல, அரசின் அங்கமான நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றைத்தான் அரசியல் சாசனம் வழங்க முடியும். மக்களும் அவர்கள் உருவாக்கும் அரசியல் கட்சிகள் பின்பற்றும் அரசியலை பொறுத்தே அரசின் இந்த உறுப்பு அமைப்புகள் இயங்கும். இந்திய மக்களும் அவர்களின் கட்சிகளும் எதிர்காலத்தில் எந்த அணுகுமுறையை மேற்கொள்வார்கள் என்பதை எப்படி கணிக்க முடியும்” என்று டாக்டர் அம்பேத்கர் கூறியிருந்தார்.

ஆக சட்டம் மட்டுமே இதனைப் பெற்றுத் தந்துவிட முடியாது என்பது நமக்கு தெளிவாகிறது! அப்படியானால் வேறு எப்படித்தான் இதனைப் பெறுவது ?

இந்திய வளர்ச்சிக்கு காரணம் கூட்டு முயற்சியே என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதமாகச் சொல்லி இருந்தார். அந்த கூட்டு முயற்சி என்பது வெறும் ஏழை -பணக்காரன் , மொழி -இனம் ,மதம் என்று இருந்து விடாது , சிலரால் உருவாக்கப் பட்ட ஜாதிய முறைகளும் , அந்த ஜாதியத்தால் உயர்ந்த -பாதிக்கப் பட்ட மக்களையும் உள்ளடக்கியதாகவே இருக்க வேண்டும் . அப்படி இல்லாமல் போனால் அது கூட்டு முயற்சியாக இருக்க முடியாது!

இன்றும் கூட சமுதாயத்தின் ஒற்றுமையை சீர் குலைத்து விடுபவர்கள் (குற்றவாளிகள்) மத்ததின் பெயரால் , ஜாதியின் பெயரால் , பணத்தின் உதவியால் தப்பித்து விடுகிறார்கள் .இத்தகைய செயல்பாடுகள் “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்பதனையே கேள்விக்கு உள்ளாக்கி விட்டது.

தி ஹிந்து தமிழ் நாளிதழின் தலையங்கத்தில் இருந்து “சாதியை ஒழிப்போம், மதவாதத்தை மாய்ப்போம் என்று கூறிவிட்டுச் சாதி உணர்வை விசிறிவிட்டு மதப்பூசல்களைக் கூர்மைப்படுத்திக்கொண்டிருக்கிறோம்”

இந்தக் கூற்று இதனை உறுதிப் படுத்துவதைப் போல உள்ளது. ஆக இதில் நம் எல்லாச் சமூகத்திற்கும் பங்கு உள்ளதோ என்ற ஐயப்பாடு உள்ளது .

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அது

“சமூக விடுதலையே, உண்மையான விடுதலை” என்ற பெரியாரின் வாக்கு!!

எவ்வளவு ஆழமானது!உண்மையானது!!

ஆம் நாம் இன்று கடந்து வந்த தொலைவை விட , இன்னும் கடக்க வேண்டிய தொலைவு வெகு தூரத்தில் உள்ளது. அதனை அடைய பல சவால்களை கடந்து செல்ல வேண்டி உள்ளது.அதுவரை இந்த சுதந்திரம் என்பது நமக்கு ஒரு கருவியாகத்தான் இருக்குமே தவிர கொண்டாட்டத்தின் எல்லையாக இருக்காது.

படங்கள்: கூகிள்

நன்றி: தி ஹிந்து தமிழ் , தினமணி