Archive for the ‘சமூகம்’ Category

ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் ரோஹித் வெமுலா என்ற தலித் மாணவர் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சமூக படிப்பு துறையில் கடந்த 2 ஆண்டுகளாக பிஹெச்.டி படித்து வந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு மாணவர்களுக்கும், ரோஹித் வெமுலா சார்ந்திருந்த அமைப்பு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு, ரோஹித் வெமுலா உட்பட 5 மாணவர்களை பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கியது. பல்கலைக்கழக விடுதியிலிருந்தும் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை ரோஹித் வெமுலா விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆங்கிலத்தில் அவர் எழுதிய கடைசி கடிதத்தின் தமிழ் வடிவம்:

காலை வணக்கம்,

இந்தக் கடிதத்தை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது நான் இவ்வுலகை விட்டு நீங்கியிருப்பேன். என் மீது கோபம் கொள்ளாதீர். உங்களில் சிலர் என் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தீர்கள், என்னை பரிபூரணமாக நேசித்தீர்கள், என்னை உரிய மரியாதையுடன் நடத்தினீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். பிரச்சினை எனக்குள்தான் இருக்கிறது. என் உடல் வளர்ச்சிக்கும் ஆன்ம வளர்ச்சிக்கும் இடையே நிறையே ஏற்றத்தாழ்வு இருப்பதாக உணர்கிறேன். அது என்னை விகாரப்படுத்திவிட்டது. ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்பதே என் விருப்பம். காரல் சாகன் போல ஓர் அறிவியல் எழுத்தாளனாக வேண்டும் என்பது எனது லட்சியம். ஆனால், என்னால் எழுத முடிந்தது என்னவோ இந்த தற்கொலை கடிதத்தை மட்டுமே…

அறிவியல், நட்சத்திரங்கள், இயற்கை இவையெல்லாம் என் விருப்பத்துக்குரியவை. என் விருப்பப்பட்டியலில் மனிதர்களும் இருக்கின்றனர். அவர்கள் இயற்கையுடனான உறவை எப்போதோ துண்டித்துக் கொண்டனர் என்பதை அறியாமலேயே அவர்களை நான் நேசித்து வந்தேன். நமது உணர்வுகள் எல்லாம் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு நம்மிடம் கடத்தப்பட்டவை, நமது அன்பு கட்டமைக்கப்பட்டவை, நமது நம்பிக்கைகள் சாயம் பூசப்பட்டவை. நாம் என்ற சுயமான ரூபமே ஒரு செயற்கை வடிவமாகிவிட்டது. எள்ளளவும் காயமடையாமல் அன்பை பெறுவது என்பது மிகவும் கடினமாகிவிட்டது.

ஒரு மனிதனின் மதிப்பு, அவனது பிறப்பு அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. சில நேரங்களில் வாக்கு, சில நேரங்களில் எண் பலம், சில நேரங்களில் சில பொருட்கள்கூட அவனது அடையாளத்தை தீர்மானிக்கின்றன. ஒரு மனிதன் எப்போதாவது அவனது ஆன்மாவின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறானா என்றால்? நிச்சயமாக இல்லை.

சில நட்சத்திர துகள்களால் ஒரு பிரம்மாண்டம் சமைக்கப்பட்டதுபோல், மனிதனின் மாண்பு சில அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. கல்வி, அரசியல், சாலைகள், வாழ்வு, சாவு என எல்லாவற்றிலும் இத்தகைய நிர்ணயங்கள் வியாபித்துக் கிடக்கின்றன.

இதுமாதிரியான கடிதத்தை நான் எழுதுவது இதுவே முதன்முறை. ஒரு கடைசி கடிதத்தின் முதல் முயற்சி என்று சொல்லலாம். இது ஒருவேளை அர்த்தமற்றதாக இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.

இந்த உலகம் மீதான எனது புரிதல் தவறாக இருக்கலாம். அன்பு, வலி, வாழ்க்கை, மரணம் இவற்றின் மீதான என் புரிதல்கூட தவறானதாக இருக்கலாம். எனக்கு எந்த அவசரமும் இல்லை; ஆனால் நான் எப்போதுமே அவசரப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறேன். வாழ்க்கையை துவக்குவதற்கு வழி தெரியா தேடலுக்கான அவசரம்.

சிலருக்கு வாழ்க்கை வெறும் சாப வடிவிலானதாக கிட்டுகிறது. எனது பிறப்பு ஒரு பயங்கர விபத்தின் விளைவு. எனது பால்ய பருவ தனிமையில் இருந்து என்னை எப்போதுமே விடுவித்துக் கொள்ள முடிந்ததில்லை. கடந்த காலங்களை திரும்பிப்பார்க்கும்போது யாராலும் போற்றப்படாத ஒரு குழந்தையாகவே எனது பிம்பம் மிஞ்சுகிறது. (நானே எனது வார்த்தைகளை அடித்துவிடுகிறேன்).

இத்தருணத்தில் நான் வேதனைப்படவில்லை, துன்பப்படவில்லை. என்னுள் ஒரு வெற்றிடத்தை நான் உணர்கிறேன். அது பரிதாபத்துக்குரியது. பரிதாபத்தின் உந்துதலால் நான் இதைச் செய்கிறேன்.

இதற்காக நான் கோழை என்று முத்திரை குத்தப்படலாம். சுயநலவாதி என்று சாடப்படலாம். ஏன், முட்டாள் என்று நிந்திக்கப்படலாம். என்னை எப்படி அழைத்தாலும் நான் கவலைப்படப் போவதில்லை. மறுபிறவி கதைகள், பேய்கள், பரிசுத்த ஆவிகள் இவற்றின் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது.

எனக்கு ஒரே ஒரு நம்பிக்கை இருக்கிறது. என் நம்பிக்கையெல்லாம் தொடுவானத்தில் உள்ள நட்சத்திரங்களை அடைய முடியும், வேறு உலகங்களை அறிய முடியும் என்பது மட்டுமே.

இந்தக் கடிதத்தை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் எனக்காக இதை செய்ய முடியும். எனது கல்வி உதவித்தொகை 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடந்த 7 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த உதவித்தொகை என் குடும்பத்தினருக்கு எப்படியாவது கிடைக்க ஏதாவது செய்யுங்கள். ராம்ஜிக்கு நான் ரூ.40,000 தர வேண்டும். ராம்ஜி அந்தப் பணத்தை திருப்பித் தா என்று எப்போதுமே கேட்டதில்லை. இருந்தாலும், ராம்ஜியிடம் அதை கொடுத்துவிடுங்கள்.

எனது இறுதி ஊர்வலம் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறட்டும். நான் தோன்றி மறைந்தேன். அவ்வளவே. அதை இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் சிந்த வேண்டாம். இவ்வுலகில் வாழ்வதைவிட மரணித்தல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். “நிழல் உலகிலிருந்து நட்சத்திரங்களை நோக்கிச் செல்கிறேன்.”

உங்கள் அறையை நான் என் சாவுக்காக பயன்படுத்தியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் உமா அண்ணா.

அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பினர், என்னை பொருத்தருள வேண்டும். நீங்கள் என்னை மிதமிஞ்சிய அளவு நேசித்தீர்கள். தங்கள் எதிர்காலம் செழிக்க என் வாழ்த்துகள்.

இறுதியாக இதை உதிர்க்கிறேன்… ஜெய் பீம்.

நன்றி: தி ஹிந்து தமிழ்
செய்தி:தி ஹிந்து தமிழ்

தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா?

மயிலாடுதுறை அருகிலுள்ள திருநாள்கொண்டசேரி கிராமத்தில் நடந்திருக்கும் அவலம் சாதிபேதமற்ற சமூகத்தைக் கனவு காணும் ஒவ்வொருவர் மீதும் விழுந்திருக்கும் பேரிடி. ‘‘இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்?’’ என்று கேட்கும் ஒவ்வொருவர் மனசாட்சிக்கும் விடப்பட்டிருக்கும் சவால். நம்முடைய ஆட்சியாளர்களையும் அரசு அதிகாரிகளையும் சாதி இன்றைக்கு எப்படித் தன் முன் வளைந்து நெளிந்து மண்டியிடவைத்திருக்கிறது என்பதற்கான அப்பட்டமான சாட்சியம்!

திருநாள்கொண்டசேரி கிராமத்தைச் சேர்ந்த மூத்த தம்பதி குஞ்சம்மாள் – செல்லமுத்து. 85 வயது நிறைந்த குஞ்சம்மாள் கடந்த நவம்பர் 26-ல் காலமாகியிருக்கிறார். பல்லாண்டு காலமாக இங்கே ஆதிக்கச் சாதியினருக்கும் தலித்துகளுக்கும் தனித்தனி சுடுகாடுகளே பராமரிக்கப்பட்டுவந்திருக்கின்றன. மேலும், தலித்துகள் பிணங்களை எடுத்துச் செல்ல ஆதிக்கச் சாதியினர் பொதுப் பாதையில் அனுமதிப்பதும் இல்லை. இந்நிலையில், மழை வெள்ளக் காலத்தில் குஞ்சம்மாள் இறந்தபோது அவர் சடலத்தைப் பொதுப் பாதையில் எடுத்துச்செல்ல அனுமதி கேட்டிருக்கிறார்கள் அவருடைய உறவினர்கள். ஆதிக்கச் சாதியினர் வழக்கம்போல் மறுக்கவும் மாவட்ட நிர்வாகத்தை அணுகியிருக்கிறார்கள். முதலில் ஆதிக்கச் சாதியினரிடம் பேசிப்பார்த்த காவல் துறை, அவர்கள் தொடர்ந்து தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவும் கடைசியில் தலித்துகளிடமே தங்கள் அதிகாரத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். குஞ்சம்மாளின் சடலத்தை போலீஸாரே முன்னின்று தனிப் பாதையில் எடுத்துச்சென்றிருக்கிறார்கள். அடுத்த ஒரு மாதத்தில், ஜனவரி 3 அன்று 100 வயது நிரம்பிய செல்லமுத்து காலமானார். இப்போதும் அதே நிலை ஏற்படும் என்பதை உணர்ந்த அவருடைய உறவினர்கள், இம்முறை சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள். சடலத்தைப் பொதுப் பாதையில் எடுத்துச்செல்ல மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. ஆனாலும், மறுபடியும் அதே நிலை. 5 நாட்களுக்குப் பின் செல்லமுத்துவின் சடலத்தை முன்னின்று தனிப் பாதையில் கொண்டுசென்ற காவல் துறை, கூடவே தலித்துகளுக்குத் தடியடியும் கொடுத்திருக்கிறது.

இது தொடர்பாக நேரில் ஆய்வுசெய்யச் சென்ற தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பி.எல்.புனியா, ‘‘ஒரு தலித் முதியவரின் உடலுக்கு உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யக்கூட அனுமதி மறுக்கப்பட்டிருப்பது, துரதிர்ஷ்டவசமானது’’ என்று கூறியிருக்கிறார். இந்நிகழ்வு துரதிர்ஷ்டவ சமானது மட்டும் அல்ல; வெட்கக்கேடானது; ஒட்டுமொத்த மாநிலத்தையும் தலைகுனிய வைப்பது.

ஒரு அரசின் சார்பில் பேசும் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, நீதித் துறை எல்லாவற்றையும் பரிகசித்து அவமானப்படுத்தி, வன்கொடுமையை ஆணவத்தோடும் பெருமிதத்தோடும் சாதியத்தால் செயல்படுத்த முடியும் என்றால், இங்கே நிர்வாகம் என்ற சொல்லுக்கான அர்த்தம்தான் என்ன? அரசு இயந்திரத்தைக் கையாளும் ஒரு மாவட்ட ஆட்சியர் அல்லது காவல் துறைக் கண்காணிப்பாளர் ஆகியோரின் மீது மட்டும்தான் பிரச்சினை என்றால், அவர்கள் எப்படி இவ்வளவுக்குப் பிறகும் அங்கு பதவியில் நீடிக்கிறார்கள்?

இந்தியாவில் சாதியம் அவ்வளவு சீக்கிரம் அழிந்துவிடக்கூடிய ஒரு சக்தியல்ல. நம் காலத்துக்குள்ளாகவே அதை அழித்துவிட முடியும் என்று நம்புவதும் பேராசைதான். ஆனால், நாம் வாழும் ஒவ்வொரு நாளும் சாதியத்துக்கு எதிராக குறைந்தபட்சம் ஒரு அடியேனும் எடுத்துவைப்பதே சமத்துவத்தை நோக்கிய நீண்ட பயணத்துக்கான குறைந்தபட்சச் செயல்திட்டமாக இருக்க முடியும். இப்படிப்பட்ட பயணத்தில், அரசின் துணிச்சலான செயல்பாடுகளே சாதியரீதியாகப் பல நூற்றாண்டுகளாக அழுத்தத்திலிருக்கும் மக்களுக்கான மிக முக்கியமான பக்கபலம். சமீப காலமாக தமிழகத்தில் சாதிய சக்திகள் தங்கள் கோர விளையாட்டுகளை அதிகரிக்க ஆரம்பித்திருப்பதோடு, முன்பு இல்லாத துணிச்சலோடும் உற்சாகத்தோடும் வெளிப்படையாக அவை மார்தட்டிப் பீடுநடைபோடுவதையும் பார்க்க முடிகிறது. சுதந்திர தினத்தன்று சேஷசமுத்திரத்தில் நடந்த தேர் எரிப்புக்குப் பின் திருநாள்கொண்டசேரி மிக அபாயகரமான சமிக்ஞைகளை அனுப்பியிருக்கிறது. தமிழகத்தின் பிரதான கட்சிகள் இந்த விஷயங்களில் காட்டும் அசாதாரண மவுனம், சூழலை மேலும் அச்சுறுத்துகிறது. இது பெரும் ஆபத்துக்கு வழிவகுக்கும்!

நன்றி: தி ஹிந்து தமிழ்
செய்தி:தி ஹிந்து தமிழ்

இறைச்சி விலை

திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒரு விலை எனவும் , ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு விலை எனவும் சிக்கன் , மட்டன் , மீன் போன்ற இறைச்சிகளுக்கு நிர்ணயம் செய்யப் படுகிறது. இதற்குப் பின்னால் பலர் சேர்ந்த ஒரு சங்கம் இருக்கிறது போல. இதைத் தட்டிக் கேட்டால் வாங்கினால் வாங்குங்கள் என்றுதான் பெரும்பாலும் சொல்கிறார்கள். இதைப் பார்த்தால் பண்டிகைக் கால ஆம்னி பஸ் டிக்கெட் விலை ஏற்றம் நியாபகத்திற்கு வருகிறது.

111111111

காய்கறி விலை

மாமிச உணவுகளுக்குத்தான் இப்படி என்றால் , காய்கறிகளுக்கும் அப்படித்தான் இருக்கிறது. சனி , ஞாயிறு வருகிறது என்று முன்னரே ஒருவித காய்கறித் தட்டுப் பாட்டை பலர் சேர்ந்து உருவாக்குகிறார்கள். இதனை மொத்தமாக வியாபாரம் செய்பவர்களிடம் இருந்து வாங்கும் சிறு வியாபாரிகள் உறுதி செய்கிறார்கள்! தேவைப் பட்டால் நீங்கள் உங்கள் அருகில் இருக்கும் மார்க்கெட் சென்று விசாரித்துப் பாருங்கள் .உங்களுக்கு உண்மை புலப்படும் .

அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்
இதைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை அல்லவா?! இதற்க்கு எல்லாம் ஒரு விலை நிர்ணயம் வர வேண்டும் , அது தொடர்ந்து கண்காணிக்கப் பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்!

ஒரு நான்கு வழிச் சாலை சிக்னல், நாலாபுறம் வண்டி வந்து செல்லும்படியான அகலமான சாலைதான் அது. வழக்கமாக ஒரே சமயத்தில் இருபுறங்கள் வாகனங்கள் செல்ல அனுமதிப்பார்கள், மற்ற இருபுறங்களில் இருப்பவர்கள் காத்திருப்பார்கள். இது தெரிந்ததுதான் இதில் என்ன சொல்ல முயற்சி செய்கிறாய் என நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. சொல்கிறேன் இதிலேயும் பிரச்சனை இருக்கிறது.

ஓர் இரு வழியில் (ஒரு முனையில்)செல்பவர்களுக்கு அனுமதி நிறுத்தப் பட்டு , அடுத்த இருவழியில் (மறுமுனையில்)செல்பவர்களுக்கு அனுமதி வழங்கும் பொழுது , இதற்க்கு முன்னால் செல்ல அனுமதிக்கப் பட்டவர்களில்(ஒருமுனையில்)  கடைசியாக சில பேர் செல்லக் கூடிய ஒரு சூழல் இருக்கும். அது தவிர்க்க முடியாததும் கூட, வேகமாக வருபவர்கள் வேகத்தை உடனடியாக குறைப்பது என்பது கொஞ்சம் கஷ்டம்தான்.

அதே வேளையில் மறுமுனையில் சிக்னல் கொடுக்கப் பட்டு இப்பொழுதுதான் பயணத்தை துவங்க இருப்பவர்கள் கொஞ்ச நேரம் நின்று , கடைசியாக செல்பவர்களுக்கு வழிவிட்டுச் செல்லலாம். இதனால் விபத்து ஏற்ப்படுவது தவிர்க்கப் படும்.

அதே நேரம் , ஒருமுனையில்  செல்பவர்களுக்கு அனுமதி நிறுத்தப் பட்டவுடன் , அவர்கள் நின்றுவிட வேண்டும். அதை விட்டு விட்டு , மறுமுனையில் கடைசி வரை செல்ல அனுமதிக்கிறார்கள்  என்பதால் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளக் கூடாது.

அந்த சிக்னல் என்ன இந்தியா -பாகிஸ்தான் எல்லையா என்ன ?  எதிர் இருப்பவரை ஒரு எதிராளிபோலப் பார்த்துக் கொண்டு ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு மோதிக் கொள்ள?பாதுகாப்பான பயணத்தில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்க வேண்டாமா ? அது நமது கடமை மட்டும் அல்ல பொறுப்பும் கூட!!