Archive for the ‘கதைசொல்லி’ Category

Image result for ஆசிட் வீச்சு

ஒரு வழியாகப் பேசி அவள் வழக்கமாகப் பேருந்து ஏறும் அதே இடத்திற்கு, அந்த ஞாயிறு வர அவளை சம்மதிக்க வைத்திருந்தான் ராம். இன்றோடு  இதற்க்கு முடிவு கட்டிவிடலாம் என்பதே இருவரின் ஒருமித்த எண்ணமாக இருந்தது. அப்பொழுதுதான் சூரியன் சோம்பலை முறித்துக் கொண்டு விழித்திருந்தான் , பறவைகளின் சத்தங்களுக்கிடையே பசுமையான இலைகள் காற்றில் ஆடும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்த அந்த ஞாயிற்றுக் கிழமை காலை 6.30 மணிக்குப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தாள் அதிரா.

சரியான தாமதத்துடன் சுமார்  6.45 மணியளவில் அவள் முன்னால் ஒரு வித வேகத்தோடு  வந்து நின்றான் ராம். பைக்கை விட்டு இறங்கியவன், சுத்தி வளைக்காமல் நேரிடையாகவே முடிவாக என்னதான் சொல்கிறாய் அதிரா? என்றான் சற்றே அவரசமான தொனியில் ,அதில் காதலை விட ஒரு வித பிடிவாதம் தெரிந்தது.

ஆறு மாத காலமாக நீ என்னைக் காதலிக்கும் எண்ணத்தோடு பின் தொடர்கிறாய் என்பது தெரியும். எனக்கு உன் மீது மட்டுமில்லை, யார் மீதும் காதலில்லை, ஏன்  இப்போதைக்கு காதலிக்கும் பக்குவம் எனக்கு வரவில்லை என்றாள் வயதை மீறிய தெளிவுடன். அந்தக் குரலில் பயமோ, அவசரமோ இல்லை மாறாக இயல்பான எண்ணத்தின்  வெளிப்பாடாகவே இருந்தது.

பேச்சு தொடர்ந்திருக்கும் போதே சட்டென்று அவன் அவசரம் விரக்தியாக மாறி நண்பகல் சூரியனின் சுவாலையைப் போல இந்தக் காலை வேளையிலும் கோபத்தின் எல்லைக்குச் சென்றவன் , சிறிதும் தாமதிக்காமல் தன் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த  ஆசிட்டை அவள் முகத்தினில் வீசினான், அதில் சிதறிய துளிகள் அருகில் இருந்த மலர்களையும், மலரா மொட்டுக்களையும் பொசுக்கி இருந்தது.வலியிலும், வேதனையிலும் துடித்த அவள் “அண்ணா” என்று அலற, சட்டென முகம் வியர்த்து தூக்கம் கலைகிறது அசோக்கிற்கு.

அசோக் 6 மாதகாலமாக ஒரு பெண்ணை ஒரு தலைப்பட்சமாக காதலிக்கிறான். அவன் காதலை வெளிப்படுத்த பாஸ்ட் புட் போல ஆயிரம் உடனடி யோசனைகளைத் தந்து அவனைக் குழப்பி இருந்தார்கள்.எதிலும் சட்டெனக்  கோபப் படக் கூடிய அசோக்கிற்கு
பத்தாம் வகுப்பு படிக்கும் அதியா என்ற தங்கையும் உண்டு. நாளை என்ன செய்தாவது அவன் காதலுக்கு சம்மதம் வாங்கிவிட வேண்டும் என்ற ஒரு மாத கால மன உளைச்சலில் இருந்தவனுக்கு,கனவில் வந்த தன் தங்கை மீதான ஒரு(தறுதலைக்)தலைக் காதலனின் ஆசிட் வீச்சும், அவள் “அண்ணா” என்று அலறிய சத்தமும்  ஏதோ செய்தது.

அந்த கலங்கிய நிலையிலும், தன் காதலிக்குப் பிடித்தாலும்,பிடிக்க வில்லை என்றாலும் பொறுமை இழக்காமல் , நிதானத்தோடு தன் அன்பின் காதலை வெளிப்படுத்துவது என்ற திட முடிவுடன் உறங்கச் சென்றான்! இருள் சூழ்ந்த அந்த இரவில் மேகங்களுக்கிடையே சுதந்திரமாகவே உலாச் செல்கிறது அந்த நிலவு!

நீங்களே சொல்லுங்கள், காதல் என்பது ஓர் அன்பின் வெளிப்பாடு தானே?!

 

படங்கள்: கூகுள்
யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் இவை எழுதப் பட்டதல்ல! அனைத்தும் கற்பனையே!!