இப்பவெல்லாம் யார் சார் ஜாதி பார்க்கிறார்கள்#4

Posted: January 22, 2016 in சமூகம்
Tags: , , , , ,

ரோஹித்துகள் ஏன் இறக்கிறார்கள்?

பள்ளிப் பருவத்தில் தலித் நண்பன் ஒருவன் எனக்கு இருந்தான். ஒருமுறை, சற்றே வேடிக்கையாக அவனிடம் நான் இப்படிக் கேட்டேன்:

“நம்ம ரெண்டு பேரு குடும்பமும் ஓரளவு வசதிதான். ஆனா, என்னை மாதிரி இல்லாம நீ மட்டும் இடஒதுக்கீட்டின் பலன்களை அனுபவிக்கிறியே. என் இடத்துக்கு நீயும் உன் இடத்துக்கு நானும் மாறிக்கொண்டால் என்ன?” அதற்கு அந்த நண்பன் சீரியஸாகவே பதில் சொன்னான்: “தோழா, ஒரு தலித்தாக இருப்பதுன்னா என்னன்னே உனக்குத் தெரியாது. ஒனக்கு மட்டுமல்ல யாருக்கும் அந்த நிலை ஏற்படக் கூடாது.”

அதற்கும் பல ஆண்டுகள் கழித்தே அந்த நண்பன் சொன்னதில் இருந்த வலியையும் பரிதவிப்பையும் நான் புரிந்துகொண்டேன். மற்றுமொரு தலித் நண்பன் (அவனுடைய பேர் ராமு என்று சும்மா வைத்துக்கொள்வோம்) தனது தோழி ஒருத்தியுடன் (அவள் பேர் ராணி என்று வைத்துக்கொள்வோம்) பேசிய விஷயத்தைப் பற்றி என்னிடம் குறிப்பிட்டபோதுதான் எனக்கு எல்லாமே உறைத்தது.

ராமு நல்ல பையன். என்ன… கொஞ்சம் தாழ்வுமனப்பான்மை கொண்டவன். தனது சாதிப் பின்னணியை எப்போதுமே மறைக்க முயல்வான். ஆகவே, ராமு ஒரு தலித் என்பது ராணிக்குத் தெரியவில்லை. அவர்களுக்குப் பொதுவான நண்பன் ஷ்யாமுவைப் பற்றி அவர்கள் பேசியது இது:

ராணி:

“ஏய், ஒனக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஷ்யாமு ஒரு தலித் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப்போறான்.”

ராமு:

“அப்படியா… அவனுக்கு என்னோட வாழ்த்துக்கள்!”

ராணி:

“ஆனா, அவள் ஒரு தலித் பொண்ணுப்பா.”

ராமு (தனது மனம் புண்பட்டதை மறைக்கும் விதத்தில்):

“இந்தக் காலத்தில் இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. உலகம் முன்னே போய்க்கிட்டிருக்கு.”

ராணி:

“இருக்கலாம்பா, ஆனாலும்… ஒரு தலித் பொண்ணைப்போய்…?”

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ராணி முற்பட்ட வகுப்பை அல்ல; மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண். சாதிப் பாகுபாட்டால் பாதிப்புக்குள்ளாகுபவர்கள்கூட இந்தச் சாதி நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது நமது ஒட்டுமொத்த சமுதாயத்தின் மனநிலையில் சாதி அமைப்பு எந்த அளவுக்கு ஊடுருவியிருக்கிறது என்பதன் அடையாளம்.

மோசமான அந்த அனுபவத்தைப் பற்றிப் பின்னால் நினைவுகூரும்போது ராமு என்னிடம் சொன்னான், “சகோதரா, இடஒதுக்கீட்டின் காரணமாக நல்ல வேலையைக்கூட ஓரளவு சுலபமாக என்னால் பெற்றுவிட முடியும். ஆனால், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஒரு பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கணும்னா அவளோட அப்பா, அம்மாவை அதுக்குச் சம்மதிக்க வைக்கிறதுக்குத்தான் வாய்ப்பே இல்லை. இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி ஐ.ஏ.எஸ். பதவியை நான் வாங்குனாகூட ஆதிக்கச் சாதிப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்குறது அவ்வளவு சுலபமில்லை.”

சாதி அடுக்கின் மேல்நிலையில், உயரிய அந்தஸ்துடன் இருக்கும் நாமெல்லாம் சாதியைப் பற்றியும் இடஒதுக்கீட்டைப் பற்றியும் பேச ஆரம்பித்தால், பேச்சின் முடிவு ‘இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும்’ என்பதாகத்தான் இருக்கும். நண்பர்களே, சாதிரீதியான பாகுபாடு என்பது நம்மால் நினைத்தே பார்க்க இயலாத அளவுக்குக் கொடுமையானது. இந்த உண்மையை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிப் புரிந்துகொண்டால்தான், ரோஹித் வெமுலாக்கள் ஏன் பிறக்கிறார்கள் என்பதும் ரோஹித் வெமுலாக்கள் ஏன் சாகிறார்கள் என்பதும் ‘மேல்சாதி’ குடும்பங்களில் பிறந்த நமக்குப் புரியும்!

– கரண் ராகவ் ஃபேஸ்புக் பதிவின் மொழிபெயர்ப்பு: தம்பி

நன்றி: தி ஹிந்து தமிழ்
செய்தி:தி ஹிந்து தமிழ்

உங்கள் வாசிப்பிற்கும்;கருத்திற்கும் நன்றி!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s