இப்பவெல்லாம் யார்சார் ஜாதி பார்க்கிறார்கள்#5

Posted: January 22, 2016 in சமூகம்
Tags: , , , , ,

நேசிக்க மறந்தோமா நாம்?

சாதி, மொழி, நிறம், பிராந்தியம், தேசம் மற்றும் வர்க்க அடையாளங்கள் மற்றும் பிரிவினைகளைத் தாண்டி ஒரு மனிதன் சகமனிதனை நேசிப்பதற்கும் விடுவிப்பதற்கும் கல்வி உதவ வேண்டும். அத்தகைய சுதந்திரச் சிந்தனையை வளர்க்கும் கல்வியைத்தான் இந்தியப் பள்ளிகளும் உயர்கல்விக் கூடங்களும் வழங்க வேண்டும் என்று சுதந்திர இந்தியாவை நிர்மாணித்த தலைவர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் பல்கலைக்கழக விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட தலித் ஆய்வு மாணவர் ரோகித் வேமூலாவின் தற்கொலை அவர்கள் வைத்திருந்த நம்பிக்கைகளைச் சிதைப்பதாகத்தான் உள்ளது. சாதிய ஒடுக்குமுறையும், தீண்டாமையும் பாகுபாடுகளும் வன்முறைகளும் நம் கண்ணுக்கே தெரியவராத இந்தியக் கிராமங்களில்தான் நிகழ்கிறது என்று பெரும்பாலானோர் இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் சாதி நமது வீடுகள், பள்ளிகள், விடுதிகள், கல்லூரிகள், உணவுப் பழக்கவழக்கங்கள், நாம் புழங்கும் பொதுவெளிகள் என எங்கும் நிறைந்திருக்கின்றன. காதல், திருமணம் தொடங்கி வேலை, நட்புகள் வரை சாதி நவீன ரூபங்களில் நம்மைத் தொடரவே செய்கின்றன.

சமீப வருடங்களில் இந்தியாவெங்கும் பள்ளிகள் மற்றும் உயர்கல்விக் கூடங்களிலும் சாதிய அடையாளங்கள் அடிப்படையில் மாணவர்களிடையே மோதல்களும் பிரிவினைகளும் அதிகரித்துள்ளன. பாடப் புத்தகங்களிலும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டத் தலைவர்களின் தேசப் பங்களிப்புகள் தணிக்கை செய்யப்பட்டிருக்கின்றன.

தமிழகப் பள்ளிகளில் ஒவ்வொரு சாதி மாணவரும் தனித்தனி நிறங்களில் கைகளில் கயிறு கட்டி அணியணியாகத் திரளும் செய்திகளையும் சமீபத்தில் கேள்விப்பட்டுவருகிறோம். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்கள் உடல்வேலையில் ஈடுபடுத்தப்படுவதும் தரையில் உட்கார வைக்கப்பட்டுத் தனியாக மதிய உணவு வழங்கப்படும் முறைகளும் நடைமுறையில் உள்ளன. தலித் மாணவர்கள் பள்ளியை விட்டு விலகும் சதவீதமும் சமீபகாலத்தில் அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிக்கல்வியை இத்தகைய பாகுபாடுகள் மற்றும் நெருக்கடிகளை மீறி போராடி முடிக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்விக் கூடங்களில் இன்னொரு பெரிய சவால் காத்திருக்கிறது. அவர்களின் மேம்பாட்டுக்கு அரசியல் சாசனம் உறுதியளித்திருக்கும் இடஒதுக்கீடு முறையே அவர்களை ஒதுக்கவும் ஒரு வகையில் காரணமாகிவிடுவதை என்னவென்று சொல்ல! இட ஒதுக்கீட்டில் ஐ.ஐ.டி மற்றும் பல்கலைக்கழகங்களில் மேற்படிப்புக்கு வரும் தலித் மாணவர்கள் இட ஒதுக்கீட்டைக் காரணம் காட்டியே அவமதிப்பைச் சந்திக்கின்றனர். கல்வி ரீதியாக, நிர்வாக ரீதியாக தொடர் புறக்கணிப்புகளுக்குள்ளாகி அவர்கள் தேர்வுகளில் தோற்கும் நிலை ஏற்படுகிறது. வளாகத்துக்குள்ளேயே தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடக்கின்றன.

கல்விக்காக துரோணருக்கு விரலைக் கொடுத்த இதிகாச காலம் தொடங்கி, இன்று வரை அறிவும் வாய்ப்புகளும் சில வகுப்பினருக்கே என்னும் மனப்போக்கு இந்தியாவில் இன்னும் தொடர்வதற்கான அடையாளம்தான் ரோகித் வேமூலாவின் தற்கொலை.

கல்லூரிகளில் சாதி, சாதிய ஒடுக்குமுறை பற்றி உரையாடல் எழும்போதெல்லாம் இட ஒதுக்கீடு சார்ந்த விவாதமாக மாற்றப்படுகிறது. இட ஒதுக்கீட்டில் வரும் மாணவர்கள் குறைவான அறிவுடையவர்களாகப் பார்க்கப்படுகின்றனர். அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கான எந்தக் கோரிக்கையும் மதிப்பில்லாதவர்கள் கோரும் அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இட ஒதுக்கீடு அறுபது ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பினும், உயர்கல்விக் கூடங்களிலும், நிர்வாக வட்டங்களிலும், ஆசிரியப் பணிகளிலும் உயர் சாதியினரே நிறைந்துள்ளனர். அந்த இடத்திலிருந்துதான் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறையும் பாகுபாடுகளும் தொடங்குகின்றன.

ரோகித் வேமூலா, யாகூப் மேமனின் மரண தண்டனை நிகழ்வைக் கண்டித்து மரண தண்டனைக்கு எதிராகப் போராடியவர். அம்பேத்கர் பெயரில் இயங்கிய மாணவர் அமைப்பில் செயலாற்றியவர். யாகூப் மேமன் மரண தண்டனையை எதிர்த்ததால், வளாகத்தில் இயங்கிய ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினரின் எதிர்ப்பையும் புகார்களையும் சந்தித்தவர். மத்திய அமைச்சர் பண்டார தத்தாத்ரேயின் வலியுறுத்தலால் தேசத்துரோகம், சாதியவாதம் ஆகிய குற்றங்களின் அடிப்படையில் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்.

ஒரு பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்களுக்கிடையே நடந்த கருத்துவேறுபாடு, இத்தகைய பழிவாங்கலுக்கு எப்படி காரணியானது? ரோகித், விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் விடுதி வளாகத்துக்கு வெளியே சில நாட்களின் இரவுகளில் தங்கி தன்னை மீண்டும் சேர்க்குமாறு போராடிய பிறகே தற்கொலை செய்துகொண்டார். உதவித்தொகையும் மறுக்கப்பட்டதால் அவரிடம் பணம் இருந்திருக்கவும் வாய்ப்பில்லை.

பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி வளாகங்களில் செயல்படும் ஏ.பி.வி.பி. போன்ற அமைப்புகளால் எப்படி ஒரு தலித் மாணவருக்கு எதிராக நிர்வாகத்தைப் பணியவைக்க முடிகிறது? ஒரு மத்திய அமைச்சர் எப்படி ஒரு மாணவரின் வெளியேற்றத்துக்குத் துணைபோக முடிகிறது?

கல்வி என்பது பிறரை, பிற வாழ்க்கை நிலைகளை நேசிக்கும் சாதனம் என்பதை மறந்துவரும் தலைமுறையா நாம்? அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் எவ்வளவோ தொலைவையும் இடைவெளியையும் கடந்து தொடர்புகொள்ளும் ஊடகங்கள் பெருகிய காலத்தில் வாழ்ந்துவருகிறோம். ஆனால் அத்தனை ஊடகங்களிலும் பழைய வெறுப்புகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுவருகின்றன. நேசிக்காமல் இருப்பதென்பது ஒரு துரதிர்ஷ்டம். இன்று நாம் எல்லாரும் இந்தத் துரதிர்ஷ்டத்துக்கு இரையாகிக்கொண்டிருக்கிறோம் என்று சென்ற நூற்றாண்டில் ஆல்பெர் காம்யு சொன்னது இப்போது மிகவும் உண்மையாக மாறியுள்ளது.

நன்றி: தி ஹிந்து தமிழ்
செய்தி:தி ஹிந்து தமிழ்

உங்கள் வாசிப்பிற்கும்;கருத்திற்கும் நன்றி!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s