இப்பவெல்லாம் யார் சார் ஜாதி பார்க்கிறார்கள்#1

Posted: January 19, 2016 in சமூகம்
Tags: , , , , , ,

தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா?

மயிலாடுதுறை அருகிலுள்ள திருநாள்கொண்டசேரி கிராமத்தில் நடந்திருக்கும் அவலம் சாதிபேதமற்ற சமூகத்தைக் கனவு காணும் ஒவ்வொருவர் மீதும் விழுந்திருக்கும் பேரிடி. ‘‘இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்?’’ என்று கேட்கும் ஒவ்வொருவர் மனசாட்சிக்கும் விடப்பட்டிருக்கும் சவால். நம்முடைய ஆட்சியாளர்களையும் அரசு அதிகாரிகளையும் சாதி இன்றைக்கு எப்படித் தன் முன் வளைந்து நெளிந்து மண்டியிடவைத்திருக்கிறது என்பதற்கான அப்பட்டமான சாட்சியம்!

திருநாள்கொண்டசேரி கிராமத்தைச் சேர்ந்த மூத்த தம்பதி குஞ்சம்மாள் – செல்லமுத்து. 85 வயது நிறைந்த குஞ்சம்மாள் கடந்த நவம்பர் 26-ல் காலமாகியிருக்கிறார். பல்லாண்டு காலமாக இங்கே ஆதிக்கச் சாதியினருக்கும் தலித்துகளுக்கும் தனித்தனி சுடுகாடுகளே பராமரிக்கப்பட்டுவந்திருக்கின்றன. மேலும், தலித்துகள் பிணங்களை எடுத்துச் செல்ல ஆதிக்கச் சாதியினர் பொதுப் பாதையில் அனுமதிப்பதும் இல்லை. இந்நிலையில், மழை வெள்ளக் காலத்தில் குஞ்சம்மாள் இறந்தபோது அவர் சடலத்தைப் பொதுப் பாதையில் எடுத்துச்செல்ல அனுமதி கேட்டிருக்கிறார்கள் அவருடைய உறவினர்கள். ஆதிக்கச் சாதியினர் வழக்கம்போல் மறுக்கவும் மாவட்ட நிர்வாகத்தை அணுகியிருக்கிறார்கள். முதலில் ஆதிக்கச் சாதியினரிடம் பேசிப்பார்த்த காவல் துறை, அவர்கள் தொடர்ந்து தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவும் கடைசியில் தலித்துகளிடமே தங்கள் அதிகாரத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். குஞ்சம்மாளின் சடலத்தை போலீஸாரே முன்னின்று தனிப் பாதையில் எடுத்துச்சென்றிருக்கிறார்கள். அடுத்த ஒரு மாதத்தில், ஜனவரி 3 அன்று 100 வயது நிரம்பிய செல்லமுத்து காலமானார். இப்போதும் அதே நிலை ஏற்படும் என்பதை உணர்ந்த அவருடைய உறவினர்கள், இம்முறை சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள். சடலத்தைப் பொதுப் பாதையில் எடுத்துச்செல்ல மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. ஆனாலும், மறுபடியும் அதே நிலை. 5 நாட்களுக்குப் பின் செல்லமுத்துவின் சடலத்தை முன்னின்று தனிப் பாதையில் கொண்டுசென்ற காவல் துறை, கூடவே தலித்துகளுக்குத் தடியடியும் கொடுத்திருக்கிறது.

இது தொடர்பாக நேரில் ஆய்வுசெய்யச் சென்ற தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பி.எல்.புனியா, ‘‘ஒரு தலித் முதியவரின் உடலுக்கு உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யக்கூட அனுமதி மறுக்கப்பட்டிருப்பது, துரதிர்ஷ்டவசமானது’’ என்று கூறியிருக்கிறார். இந்நிகழ்வு துரதிர்ஷ்டவ சமானது மட்டும் அல்ல; வெட்கக்கேடானது; ஒட்டுமொத்த மாநிலத்தையும் தலைகுனிய வைப்பது.

ஒரு அரசின் சார்பில் பேசும் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, நீதித் துறை எல்லாவற்றையும் பரிகசித்து அவமானப்படுத்தி, வன்கொடுமையை ஆணவத்தோடும் பெருமிதத்தோடும் சாதியத்தால் செயல்படுத்த முடியும் என்றால், இங்கே நிர்வாகம் என்ற சொல்லுக்கான அர்த்தம்தான் என்ன? அரசு இயந்திரத்தைக் கையாளும் ஒரு மாவட்ட ஆட்சியர் அல்லது காவல் துறைக் கண்காணிப்பாளர் ஆகியோரின் மீது மட்டும்தான் பிரச்சினை என்றால், அவர்கள் எப்படி இவ்வளவுக்குப் பிறகும் அங்கு பதவியில் நீடிக்கிறார்கள்?

இந்தியாவில் சாதியம் அவ்வளவு சீக்கிரம் அழிந்துவிடக்கூடிய ஒரு சக்தியல்ல. நம் காலத்துக்குள்ளாகவே அதை அழித்துவிட முடியும் என்று நம்புவதும் பேராசைதான். ஆனால், நாம் வாழும் ஒவ்வொரு நாளும் சாதியத்துக்கு எதிராக குறைந்தபட்சம் ஒரு அடியேனும் எடுத்துவைப்பதே சமத்துவத்தை நோக்கிய நீண்ட பயணத்துக்கான குறைந்தபட்சச் செயல்திட்டமாக இருக்க முடியும். இப்படிப்பட்ட பயணத்தில், அரசின் துணிச்சலான செயல்பாடுகளே சாதியரீதியாகப் பல நூற்றாண்டுகளாக அழுத்தத்திலிருக்கும் மக்களுக்கான மிக முக்கியமான பக்கபலம். சமீப காலமாக தமிழகத்தில் சாதிய சக்திகள் தங்கள் கோர விளையாட்டுகளை அதிகரிக்க ஆரம்பித்திருப்பதோடு, முன்பு இல்லாத துணிச்சலோடும் உற்சாகத்தோடும் வெளிப்படையாக அவை மார்தட்டிப் பீடுநடைபோடுவதையும் பார்க்க முடிகிறது. சுதந்திர தினத்தன்று சேஷசமுத்திரத்தில் நடந்த தேர் எரிப்புக்குப் பின் திருநாள்கொண்டசேரி மிக அபாயகரமான சமிக்ஞைகளை அனுப்பியிருக்கிறது. தமிழகத்தின் பிரதான கட்சிகள் இந்த விஷயங்களில் காட்டும் அசாதாரண மவுனம், சூழலை மேலும் அச்சுறுத்துகிறது. இது பெரும் ஆபத்துக்கு வழிவகுக்கும்!

நன்றி: தி ஹிந்து தமிழ்
செய்தி:தி ஹிந்து தமிழ்

Advertisements

உங்கள் வாசிப்பிற்கும்;கருத்திற்கும் நன்றி!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s