Archive for June, 2015

நேற்று வழக்கம் போல வண்டியில் ஆபீஸ் போய்க்கொண்டு இருந்தேன். வண்டி வேல் டெக் கல்லூரி அருகே செல்லும் பொழுது  எதிர்பாராத விதமாக அது நடந்து விட்டது. ஆமாம் யாரோ வண்டியை பின்னாடி இழுப்பது போலவும் , வண்டி மேற்கொண்டு செல்ல தயங்குவது போலவும் தோன்றியது. என்ன ஆச்சு என்று உடனே ஓரமாக நிறுத்திப் பார்த்தால்!! புஸ்ஸ்ஸ் புஸ்ஸ்ஸ் புஸ்ஸ்ஸ்,,ஜுராசிக் பார்க் படத்தில் வரும் சத்தம் கேட்டது,!பிறகுதான் தெரிந்தது சத்தத்திற்க்கான காரணம்! டயர் பஞ்சர்!! பெட்ரோல் இல்லாமல் நின்று இறந்தால் கூட வேற வண்டியோடு தொத்திக் கொண்டு சிறிது தூரம் செல்லலாம் ஆனால் பஞ்சர் என்றால் ?! கஷ்டம்தான்! என்ன செய்வது என்று தெரியாமல் அக்கம் பக்கம் பார்த்தேன் , எல்லோரும் வேகமாக சென்று கொண்டிருந்தார்கள் .அங்கே தாகத்துக்கு பஞ்சர் போட ஜூஸ் கடை மட்டும்தான் இருந்தது, கொஞ்சம் தூரம் பார்த்தால் அங்கே வாழ்க்கையை பஞ்சர் ஆக்கும் டாஸ்மாக் மட்டுமே இருந்தது. சரி நம் நேரம் என நொந்து கொண்டு , சிறிது தூரம் வரை தள்ளிக் கொண்டுசென்றேன். என்னிடம் எந்த டூ வீலர் பஞ்சர் ஒட்டும் ஆட்களின் மொபைல் நம்பர் இல்லை. சிறிது தூரம் தள்ளியதும் ஓர் இடத்தில் பஞ்சர் ஒட்டணுமா தொடர்பு கொள்க என நம்பர் ஒன்று எழுதப் பட்டு இருந்தது. இப்பத்தான் காலையிலும் எரியும் ஸ்ட்ரீட் லைட் போல முகம் பளிச்சென மின்னியது. நல்ல வேலை மொபைல்ல சார்ஜ் இருந்தது ,அப்படா என பெருமூச்சு விட்டு அந்த நம்பர்க்கு அழைத்தால் “அங்க வர இப்ப ஆட்கள் இல்லை சார்” என்று சொல்லிவிட்டான்! இப்பொழுது திடீரென பவர் கட் ஆனது போல ஆகிவிட்டது முகம்! என்ன செய்வது ?என்னிடம் வேறு நம்பர் இல்லை !நொந்து கொண்டு ஒரு 15 நிமிடம் தள்ளிக் கொண்டு கீழ்கட்டளை-கோவிலம்பாக்கம்-வேளச்சேரி-கிரோம்பேட் 4 வழிச் சந்திப்பில் ஒரு பஞ்சர் கடை இருந்தது. பஞ்சர் கடையப் பார்த்ததும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம்! காத்திருந்து காதலி கிடைத்ததைப் போல அவ்வளவு மகிழ்ச்சி! ஒரு வழியாக பஞ்சர் ஒட்டி முடித்தாயிற்று. அதோடு நில்லாமல் , அந்த டூ வீலர் மெக்கானிக்கலிடம்  இதே வழித்தடத்தில் பஞ்சர் ஆனால் கூப்பிட்டால் வந்து ஒட்டித் தருவீர்களா என்று கேட்டேன் . தருவோம் சார் , ஆனால் டபுள் சார்ஜ் என்றார். பஞ்சர் ஒட்ட 70 ரூபாய் , இந்த மாதிரி இடையில் வந்து வழித்தடத்தில் பஞ்சர் ஒட்டினால் எக்ஸ்ட்ரா 80 ரூபாய் . ஆட்டோ மீட்டரை விட அவர் ஒண்ணும் அதிகம் கேட்கவில்லை எனத் தெரிந்தது!! அவர் மொபைல் நம்பரைக் குறித்துக் கொண்டேன்! இதன் மூலம் நம் மொபைலில் இந்த மாதிரி டூ வீலர் பஞ்சர் ஒட்டுபவர்களின் நம்பர் சில இருப்பது அவசியம் எனத் தெரிந்து கொண்டேன் .அதோடு இல்லாமல் நாம் வழக்கமாக செல்லும் சாலையில் எங்கு எங்கு பெட்ரோல் பங்க் இருக்கு , டூ வீலர் பஞ்சர் கடை எங்கு இருக்கு என்பது தெரிந்து வைத்திருக்க வேண்டும். எவ்வளவோ பன்றோம்! இதைப் பண்ண மாட்டோமா ?! வேல் டெக்  காலேஜ் முதல் கீழ்கட்டளை போற சிக்னல் அல்லது காமாட்சி ஹாஸ்பிட்டல் போற வழி வரை ஒரு வேளை உங்கள் வண்டி பஞ்சர் ஆனால் இவர்களைத் தொடர்பு கொள்ளவும் , 9566156262 9677245997-விஷ்ணு டூ வீலர்

நான் வியந்த மனிதர்கள்

நேற்று எனது மொபைல்ல இணையச் சேவை ஒழுங்காக எடுக்க வில்லை. இரவு 11 மணி இருக்கும், வாடிக்கையாளர் சேவையிடம் முறையிடலாம் என்று அழைத்தேன், மறுமுனையில்  அந்தோனி என்பவர் (சாந்தோம் airtel வாடிக்கையாளர் சேவை மையம்)அழைப்பை ஏற்றார்.பாட்சா படத்தில் வரும் அந்தோனி போல இல்லை அவர்! மிகவும் மரியாதையாகவும் , படபடப்பு எதுவும் இல்லாமலும், தெளிவாகவும் பேசினார்.

பெரும்பாலும்  வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் ஒரு வித அவரச கதியில் பேசுவார்கள்( நான் கேட்டவரை) .ஆனால் இவர் முற்றிலும் மாறுபட்டவர் மட்டும் இல்லாமல் மிகவும் பொறுமையுடனும் , பொறுப்புடனும் நடந்து கொண்ட விதம் வியப்பளித்தது.

இவ்வளவு பொறுமையாகவும் , தெளிவாகவும் பேசுகிறீர்களே பாராட்டுக்கள் என்றேன். “நீங்கள் எதற்காக அழைத்தீர்களோ அதற்க்கான விவரம் முழுமையாக உங்களுக்குச் சென்று சேர வேண்டும், அழைப்பை முடித்த பிறகு உங்களுக்கு குழப்பமோ , மீண்டும் அதைப் பற்றிய தகவல்களோ தேவைப்படதவாறு  முதல் முறையே அனைத்துத் தகவல்களும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று பதில் அளித்து ஆச்சர்யப் பட வைத்தார்!!”

இதைக் கேட்டு உங்களுக்கும் ஆச்சர்யமாக இருக்கிறதா?!

யாதுமாகி நின்றேன் -இது விமர்சனம் அல்ல வியப்பு!!

இப்பொழுது நண்பன் கவி இளவல் தமிழ் (அரவிந்த்) அவர்களின் யாதுமாகி புத்தகம் படிக்கத் துவங்கி உள்ளேன். இது ஒரு கவிதைப் புத்தகம். அவரின் கவிதையைப் படிக்கும் பொழுதே சிறுவயதில் பரிசாகக் கிடைத்த  பாரதியாரின் கவிதை புத்தகத்தை வாசித்ததைப் போல ஒரு உணர்வு எழுந்தது.

எண்ணத்தில் மட்டும் அல்ல , எழுத்திலும் தமிழுக்கு ஏதோ சொல்ல முனைந்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்! அதனை  முதல் புத்தகத்திலே சாதித்து இருப்பதற்கு பாராட்டியே ஆக வேண்டும்.

கவிதை நிறைய தமிழ் வழிகிறது, அதனால் இது புரியவில்லை என்று சிலர் சொல்லலாம்! அவர்களுக்கு ஒரு சில கேள்விகள்

ஒரு சிறந்த புத்தகம் படித்து முடித்த பிறகு நம்மை சிந்திக்க வைக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் எதையாவது கற்றுக் கொண்டோம் என்ற எண்ணம் எழ வைக்க வேண்டும் அந்த வகையில் இந்தப் புத்தகம் இரண்டையும் செய்திருப்பதாகவே உணருகிறேன். புரியவில்லை என்பது நாம் இன்னும் நன்றாக கற்க வில்லை அல்லது நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது என்ற பொருளில் எடுத்துக் கொள்ளலாம். கவிதைகளுடன் சேர்த்து அதற்க்கு ஏற்றாப்போல ஓவியங்களும் சேர்த்து இருக்கலாம், இன்னும் பிரம்மாண்டமாக இருந்திருக்கும்!

வலி பொறுத்தவள்  என்று வாழ்த்துப் பாடலில் தொடங்கி அடிமைகள் அல்லோம்,தெருவோரத் தேவதை,என் வீட்டுக் கடவுள் என பல தலைப்புகளில்  நீண்டு கொண்டே போகிறது இவரது கவிதை!

அவர் கவிதைகளில் நான் ரசித்த சில வரிகளைச் சொல்லி நிறைவு செய்கிறேன்!

இக்கடல் சூழ் உலகிலோர் கடவுளும் உண்டோ ?- வலி பொறுத்தவள்
விண்வேந்தன் -பைந்தமிழ் தேர்ப்பாகன்
சாமிகளும், மதங்களுமே வாயில்வரை என்போம்-அடிமைகள் அல்லோம்
ஓயாம நான் அழுதும் இன்னும் ஒரு தாயும் பிறக்கலையே -தெருவோரத் தேவதை

இப்படி நெறைய சொல்லிக் கொண்டே போகலாம்! மொத்தத்தில் இந்தப் புத்தகம் “இளைஞர்களுக்குத்” தமிழ் ஆர்வம் குறையவில்லை என்பதற்க்குச் சான்றாக நிற்கிறது!

yathumagi

yathumagi

ஜூன் 21-சர்வதேச யோகா தினம்

இனி யோகா என்பது வெறும் கிளாஸ் இல்லை! யோகம்!!

விஜயகாந்த் யோகா செய்தார்!

அட அவர் தூங்கி இருப்பார்பா!,,

கணிவு-கம்பீரம்-கட்டுப்பாடு- அப்பா